கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதலாம் திகதி திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக கைப்பற்ற போராட்டம் | Virakesari .lk
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் அரசாங்கதிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாம் திகதி திங்கட்கிழமை துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் சுசந்த, இது குறித்து தெரிவிக்கையில்,
துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுக அதிகார சபைக்கும், அரசாங்கத்திற்கும் பாரிய அளவிலான நட்டம் ஏற்படப்போகின்றது.
இதற்கு நாம் பொறுப்பல்ல, அரசாங்கமே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நாடு கடனில் நெருக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிற்கு மேலும் நட்டத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் கலந்துரையாட இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய நாளைய தினம்(இன்று) காலை பத்து மணிக்கு பிரதமரை சந்தித்து நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இந்த பேச்சுவார்த்தையில் எமக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம், குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முற்றுமுழுதாக துறைமுக அதிகார சபைக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
ஆனால் அதற்கு இணக்கம் எட்டப்படவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.