தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, தனது பதவி விலகல் கடிதத்தை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வடக்கில் தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பௌத்த மதகுருமார்கள் சிலராலும் , தொல்பொருள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பேராசிரயர் அனுர மனதுங்கவை கடுந்தொனியில் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களில் வெளியாகிருந்த நிலையில் , அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் பேராசிரியர் மனதுக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் மனதுங்க முன்னர் களனிப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய கற்கைகளுக்கான நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். அத்தோடு தொல்பொருளியலுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.