நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை : அவ்வாறு செயற்பட்டால் சட்ட நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர்

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியில் மோதுண்டு காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால, கலுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எனினும் , லொறியின் சாரதியை தாக்கியமை சட்டவிரோதமானது. அதனால் , சம்பந்தப்பட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொட்பில் அவர் மேலும் கூறியாவது ,

பன்னிபிட்டிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த , போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை லொறி சாரதியொருவரை தாக்கும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரால் சரத்வீரசேகர, இது தொடர்பில் உடனே விசாரணைகளை முன்னெடுத்த , சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் , விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்தனர். அதற்கமைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தின் போது , கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகரை குறித்த லொறி மோதியுள்ளதுடன் , இதன்போது படுகாயமடைந்த அவர் தற்போது கலுபோவிலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

லொறியின் சாரதியின் கவனக்குறைப்பாடின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் , சம்பந்தப்பட்ட சாரதியை தாக்கியமை சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதிவழங்கப்பட்டில்லை.

அவர் குற்றம் செய்துள்ளதாக தெரியவந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையே எடுத்திருக்க வேண்டும். அதனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவருக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமையவும் , குற்றவியல் சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.