தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கின்றது.
இச் செயற்றிட்டம் தொடர்பில் கலாநிதி. நிலான் குரேக்கும் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. மந்திரிமனையினை புனர்நிர்மானம் செய்து பாதுகாப்பது தொடர்பிலான முழு செயற்றிட்ட வரைபடத்தையும் தயாரித்துக் கொண்டு பின்னர் நவ்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் அதன் பழமை மாறாமல் அதன் தனித்துவத்தை பேணிக் கொண்டடு பகுதி பகுதியாக புனர்நிர்மானம் செய்வதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் முதலில் மந்திரிமனைக்கு மேல் ஆறு அடி உயரத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றினை அமைத்து மந்திரி மனையினைப் பாதுகாத்துக் கொண்டு மந்திரிமனையின் உள்ளகப் பணிகளை பகுதி பகுதியாக ஆரம்பிப்பது என்றும் அதில் முதலாவதாக மந்திரிமனையின் கூரை வேலைகள் மற்றும் மந்திரிமனையின் முகப்பு ஆகியவற்றினை அதற்கே உரிய தனித்துவம் மாறாமல் செயற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
உரிய பராமரிப்பின்றி காணப்படும் தமிழரின் முக்கிய மரவுரிமைச் சின்னமாகிய நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனை இம்முறை மழைகாலத்தில் இடிந்து விழக்கூடிய அபாயநிலை தொடர்பிலும் அதனைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்பது தொடர்பிலும் யாழ்ப்பாண மரவுரிமைச் மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மாவுரிமைச் மையத்தின் உறுப்பினரும் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியதை அடுத்து கிடைக்கப்பெற்ற நிதிகளில் இருந்து இச் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு யாழ்ப்பாண மரவுரிமை மையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தமிழர் தயாகப் பகுதிகளில் காணப்படும் மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் முன்வரவேண்டும் என்பதுடன் யாரிடமாவது மந்திரிமனை தொடர்பான பழைய புகைப்படங்கள் ஆவணங்கள் மற்றும் வீடியோ இருப்பின் jaffnaheritagecentre@gmail. com எனும் இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோருகின்றோம்.
மந்திரிமனையினை பாதுகாப்பது தொடர்பிலான ஆரப்ப மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரித்தல் போன்ற ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில்; புனர்நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்படவும் உள்ளது.