ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் மத்தியில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முதலில் நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் தமிழ் கட்சி தரப்பினர் சர்வ கட்சி அரசு அமைவதற்கு சாதகமாக அமைய வாய்ப்பு ஏற்படும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தூரநோக்கு சிந்தனையாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் செய்தியில்
நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் தொடர்பாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்
உண்மையிலேயே சர்வ கட்சி அரசாங்கம் அமைய பெறுவதற்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அவற்றிற்கு ஆதரவு வழங்க இருக்கின்றனர்
அந்த வகையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றார்
உண்மையில் தமிழ் தரப்பு கட்சினர் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கிய செயல்பாடாக ஜனாதிபதியிடம் தெரிவித்து நல்லெண்ண வெளிப்பாடாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் பரிசீலிக்க கூடியதாக இருக்கும்
ஏனென்றால் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றது
இதில் முதன்மையாக இருப்பது அரசியல் கைதிகளின் விவகாரம் இந்த அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும்போது சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை தமிழர் தரப்பு பரீசீலிக்க முடியும்.
அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணி அபகரிப்பு மற்றும் வடகிழக்கு பகுதிகள; மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புலம்பெயர்ந்தோரை இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு சாதகமான செயற்பாடாக அமையும் .
குறிப்பாக மாகாணங்களுக்கு உள்ள நிதி அதிகாரங்கள் சம்பந்தமாக பேசப்பட வேண்டும் அத்துடன் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்
அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்
இவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது தமிழ் தரப்பு சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பாக சாதகமாக பரீசீலிக்க கூடியதாக இருக்கும்
ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை சரியாக தமிழ் தரப்பினர் பயன்படுத்த வேண்டும். ஆகவே முதலில் அரசியல் தமிழ் கைதிகள் விடுதலை நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறுமாகில் தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடி பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அழைப்பு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.