நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது- சபா.குகதாஸ்.

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

இலங்கைத் தீவு பாரிய பொருளாதார வறுமை காரணமாக திறைசேரியில் டொலர்கள் இல்லாது வெளிநாடுகளில் கடனுக்கு மேல் கடன் படும் அவலம் காரணமாக எரிபொருளின் பாரிய விலை உயர்வு மக்களை அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறக்கி பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இவ்வாறு நாடு எரிந்து கொண்டு இருக்கும் போதும் ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் ஒரு தளர்வு கூட இல்லாமல் தொடர்ந்த வண்ணமே உள்ளனர்.

வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு , போன்ற பகுதிகளில் இராணுவ சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இருபாதாயிரம் ஏக்கர்(20000) தனியார் காணிகளை விடுதிகளுக்கும் , இராணுவத் தோட்டங்களுக்கும் , ஏனைய இராணுவத் தேவைகளுக்குமாக சுவீகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

முழு நாடும் அவலத்தை சந்தித்ததைக் கூட கவலை கொள்ளாத ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களை இன ரீதியாக அழிப்பதில் தீவிரமாகவே உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.