மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இல்லாத காரணத்தினாலேயே நாட்டில் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பத்தேகமவில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காலி மாவட்ட தேர்தல் அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள், விவசாயிகள், பிற கட்சிகள் மத்தியில் போராட்டங்கள் அலை வீசுகின்றன. இதற்கு மக்கள் பிரதிநிதிகளே காரணம். அவர்கள் மக்களிடம் செல்வதில்லை. மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பேசுவதில்லை. ஒவ்வொரு கட்சியையும் விமர்சித்து வருகின்றனர்.
நாட்டில் பொருட்களின் விலை மேலும் உயர்ந்தால் மோசமான நிலை ஏற்படும்.பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிந்தோம் ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
எமது கட்சியின் எதிர்காலத்தை மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி செய்து வருகிறோம், இந்த நாட்டில் எந்தக் கட்சியாலும் தனித்துச் செல்ல முடியாது, தனித்து ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.