நீதியமைச்சு, நிதியமைச்சு, பிரதமர் அலுவலகம் முன்பாக காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் பிரதமர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6,000 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ‘காணவில்லை’ என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றிதழ் கிடைக்கப்பெற்ற குடும்பங்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க மரணப்பதிவுச்சட்டத்தின் 2 ஆவது சரத்திற்கு அமைவாக மரணத்திற்கான காரணமாக ‘நீண்டகாலமாகக் காணவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட சான்றிதழைத் தம்வசம் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனைக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 மில்லியன் ரூபாவில் இடைக்காலக்கொடுப்பனவாக 153 குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் 11 மில்லியன் ரூபா செலுத்தப்பட்ட நிலையில், மேலும் 489 மில்லியன் ரூபா எஞ்சியுள்ளது.

எனவே நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக எஞ்சியுள்ள 489 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தேவையானளவு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.