வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு, மாவட்டச் செயலாளர், முன்மொழிவொன்றை, எல்லை நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஓர் இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி, இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துகள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் எதையும் அறியாமல், வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக எல்லை நிர்ணயக் குழுவுக்கு அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு, எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.