நெருக்கடிகளைத் தீர்க்க இதுவரை எவ்வித திட்டமும் தீட்டப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள் தொடர்பில் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், பசளை போன்றவற்றை வழங்கி வருவதாகவும், அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பின்னர் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில், அச்சமூட்டும் சூழலே நிலவுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதனையும் திட்டமிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களால் எதனையும் திட்டமிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்களா என்பதை அவர்களது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டியுள்ளதாக அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியை தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேசிய இன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.