பசில் பிரதமரானாலும் அதனை செய்ய முடியாது – திகா

தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கெண்டு செல்லுகிறது. எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள், பெற்றோல், டிசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.

வாக்களித்த பெரும்பான்மை மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் எவ்வித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. கடந்த அரசாங்கத்தில் எங்களால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மாத்திரம் உள்ளது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் திறப்பு விழா செய்து வருகிறார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் என்பது ஒன்று தேவையில்லை. காலி, மாத்தறை போன்ற பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் எவ்வாறு சிறுந்தோட்ட உரிமையாளர்களாக இருக்கின்றார்களோ அதேபோல் மலையகத்தில் உள்ளவர்களும் சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

தொழிலாளர்களுடைய பிரச்சினைக்கு இதுதான் தீர்வு இதனை விட்டு நாம் கம்பனிகாரர்களிடம் சென்று மண்டியிட தேவையில்லை.

வருகின்ற ஆட்சி என்பது சஜித் பிரேமதாச தலைமையிலான் ஆட்சியே இடம்பெறும். அதன் போது எமது மலையக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எம்மால் முன்னெடுத்து செல்ல முடியும். நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். அதேபோல் இம் முறையும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்வோம்.

13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதென்றால் தமிழ் கட்சிகளின் கூட்டணியின் உடன்படிக்கையில் என்னால் கைச்சாத்திட முடியும். அதனை மீறி செயற்பட்டால் நாம் கைச்சாத்திட மாட்டோம். சேதன பசளை என்பது கட்டம் கட்டமாக செய்யப்படவேண்டிய ஒரு விடயம். இன்று நாட்டில் விவசாய துறை தேயிலை துறை, போன்ற துறைகள் பசளை இன்மையால் பாரிய பிரச்சினையினை எதிர்நோக்கியுள்ளார்கள் அதேபோல் உரத்தினை வழங்கினால் மாத்திரமே தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியும் எமது அரசாங்கத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர் ஊடாகவே உதவி ஆசிரியர்கள் நியமனத்தை பெற்று கொடுத்தோம். இதனை வைத்து கொண்டு எவரும் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.