ஊழலின் பாதகமான விளைவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது இம்மாத தொடக்கத்தில் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கிறது.
கடல் கடந்த நிறுவனங்கள் எவ்வாறு ஊழலை ஊக்குவிக்கிறது என்பதையும், இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் நிரூபிக்கின்ற வகையில் தெளிவான ஆதாரங்களை பண்டோரா பேப்பர்ஸ் வழங்குகிறது. குறிப்பாக இலங்கையின் முன்னாள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பெறுமதிமிக்க பரவலான சொத்துக்களை இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனம் தனது ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடுகையில், பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உரிய அதிகாரசபைகளிடம் கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பண்டோரா பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான விசாரணையினை ஆரம்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனமானது தனது ஆரம்ப அறிக்கையினை தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவரின் விபரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பில் ஓர் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு 2021 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. இந்த பகிரங்கப்படுத்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகள் இலஞ்ச ஒழிப்புச் சட்டம் 23A, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டப் பிரிவு 4(1) (CIABOC Act) மற்றும் சொத்துக்கள், பொறுப்புகள் பிரகடன சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக இருக்கலாம் என்பதை குறிப்பிட்ட TISL நிறுவனம், நிருபமா ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவரது சொத்துக்கள், பொறுப்புக்கள் பிரகடனங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கையினை முன் வைத்தது. மேலும், நாட்டின் பொது நிதியானது பாதுகாப்பான வெளிநாட்டு புகலிடங்களில் மோசடி மற்றும் தூய்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் TISL கோரியது.
ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று, TISL நிறுவனத்தினால் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) எழுதப்பட்ட கடிதத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பண தூய்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணையினை நடாத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான சட்ட அமுலாக்க அதிகார நிறுவனங்களை ஒருங்கிணைக்குமாறு கோரிக்கை விடுத்தது. 2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதி பரிமாற்றல் அறிக்கையிடல் சட்ட ஏற்பாடுகளின் (FTRA) அடிப்படையில் நிறுவப்பட்ட மத்திய சுயாதீன அமைப்பான நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) ஆனது பண தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரித்தல் மற்றும் வழக்கு தொடர்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்ககளுடன் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற குறித்த இரண்டு நபர்களுடனும் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய அதிகாரசபைகளுக்கு தேவையான ஆதாரங்களை வழங்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FIU விற்கு குறித்த கடிதத்தினூடாக TISL கேட்டுக்கொண்டது.
நிருபமா ராஜபக்சவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை கோரி தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முறையே தேர்தல் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் என்ற ரீதியில் TISL நிறுவனமானது மூன்று தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பங்களையும் தாக்கல் செய்தது.
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பண்டோரா பேப்பரில் பகிரங்கப்படுத்திய கடல் கடந்த சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்தை மீறிய குற்றத்திற்காக குற்றவாளியாகக் கருதப்படுவார். எனவே, பண்டோரா பேப்பர்ஸ் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்துக்களானது குறித்த பிரதி அமைச்சர், அவரது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் கடல் கடந்த சொத்துக்கள் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டதா என்பதை அடையாளம் காண அவரது சொத்துக்கள் தொடர்பான பிரகடனமானது ஓர் முக்கிய விடயமாகும்.
இந்த விவகாரம் குறித்து TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா கூறுகையில், “பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்தியவைகள் குறித்து சுயாதீன விசாரணையினை மேற்கொள்ள நாட்டின் உரிய அதிகாரசபைகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். எந்தவொரு குறுக்கீடு, தடைகள் அல்லது தாமதங்கள் இன்றி உரிய செயல்முறை பின்பற்றப்படுவது முக்கியமாகும். அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) வரும்போது, அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுடன் தொடர்புடைய சொத்துக்களை வெளிப்படுத்தினால், குற்றச்சாட்டுகளிலிருந்து தமது பெயர்களை நீக்கிக் கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. ஒரு கடுமையான மற்றும் நடுநிலையான விசாரணையை நடத்துவது நாட்டின் சட்ட அமுலாக்க நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு வெள்ளை காலர் (white collar) குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வலுவான எச்சரிக்கையாகவும் அமையும்.
” TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் கூறுகையில், “சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து இரகசிய அதிகார எல்லைக்குள் செல்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களும் இவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த பிரச்சினையை இராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு வருவது அவசியமாவதுடன், குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற இடங்களிலிருந்து சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.” எனக் குறிப்பிட்டார்.”