அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பை வெளியிட்டிருக்கும் அதேவேளை, மிகமுக்கியமான பல்வேறு விடயங்கள் அந்தத் திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை புருசேல்ஸில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நட்பானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பு நல்லுறவு குறித்த மீளாய்வும் இடம்பெற்றது.
அதுமாத்திரமன்றி ஆட்சி நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடக்கம் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றாடல், பல்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு வரை இருதரப்பினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான இலங்கையினால் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேவேளை வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக உருவாகியிருக்கும் இயலாமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. அதனைக் கேட்டறிந்துகொண்ட இலங்கை, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான முறையில் தடுப்பூசிகள் பகிரப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குத் தனது பாராட்டை வெளியிட்டது.
அதேவேளை மேற்படி இருதரப்புக்கலந்துரையாடலின்போது ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும் நல்லிணக்கப்பொறிமுறையிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தியது.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறையுடனும் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை ஊக்குவித்தது.
அத்தோடு மேற்படி சுயாதீனக்கட்டமைப்புக்கள் சுதந்திரமாகவும் செயற்திறனுடனும் இயங்கவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலின்போது சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிசெய்தல் என்பவற்றின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் நீதி மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளு;ககு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.
அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வரவேற்பை வெளியிட்டபோதிலும், மிகமுக்கியமான காரணிகள் வர்த்தமானி அறிவித்தல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.
இதுவிடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்திய கரிசனை குறித்து அவதானம் செலுத்திய இலங்கை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.
மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.
அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வர்த்தகத்தொடர்புகள் குறித்து இதன்போது இருதரப்பும் அவதானம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கின்ற இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவாகக் கேட்டுக்கொண்டது.
அதற்குப் பதிலளித்த இலங்கை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெளிவுபடுத்தியது. அத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.
மேலும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தமது வரவேற்பை இலங்கை வெளிப்படுத்திய அதேவேளை, கடந்த 2021 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் மீளாய்வு நடவடிக்கைகளின்போது இலங்கையைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுகூர்ந்தது.
அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தின்கீழ் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளடங்கலாக இலங்கை கொண்டிருக்கக்கூடிய 27 சர்வதேசக்கடப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கான தமது கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.