பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களை உசுப்பேத்தி காலைவாரிய முன்னணி! :ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் குற்றச்சாட்டு

கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் இன்று (11) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் வடக்கு கடற்தொழிலாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மோசமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களாக வீதியில் போராட இறங்கியபோது கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல மக்கள் போராட்டங்களுள் உள் நுழைந்து உசுப்பேத்தும் வீர வசனங்களை விட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

உண்மையாக இலங்கை அரசாங்கம் தமிழக கடற்தொழிலாளர்களையும் வடக்கு கடற்தொழிலாளர்களையும் முரண்பட வைக்கும் பொறியாக மீனவர் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி வருகின்றது.

இதற்கு ஆதரவாகவே முன்னணியின் ஒத்திவைப்பு பிரேரணை நாடகமும் அரங்கேறியுள்ளது.

வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் கதைப்போம் என்று வடமராட்சி மீனவர் போராட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த முன்னணி, பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சிந்திக்காது அரசாங்கத்தின் நலன்கள் பாதிக்காத வகையில் மீனவரின் வாழ்வாதாரப் பிரச்சினையை பலியிட்டுள்ளனர்.

முன்னணியின் வெற்றுக் கோசங்களும் உசுப்பேத்தும் ஊடக அறிக்கைகளும் தொடர்ந்து பொய்யுரைக்கும் செயற்பாடுகளும் இனத்தின் விடுதலைக்கு அர்த்தமற்றவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.