இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த விஜயமாமனது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை என தெரிவித்த டெல்லி செய்தி மூலங்கள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டன.
குறித்த திகதியில் ஓரிரு தினங்கள் முன்பின் ஆனாலும் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மூலங்கள் மேலும் குறிப்பிட்டன.
வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழுவின் கொழும்பு வருகை பிரதமர் மோடியின் விஜயத்திற்கான முன்னேற்பாடுகளை மையப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய உட்பட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதுடன் உத்தியோகப்பூர்வ அழைப்பிதழ்களையும் கையளித்துள்ளது.
குறிப்பாக அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் தொடர்பில் கலந்துரையாடி உத்தியோகப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் பலர் நேரடியாக சமூகமளிக்க உள்ளதுடன் மியன்மார் உட்பட ஓரிரு நாடுகள் மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக கலந்துக்கொள்ள உள்ளன. இந்தியாவை பொறுத்த வரையில் பிம்ஸ்டெக் மாநாடு முக்கியமானதொன்றாகும்.
எனவே உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இறுதியாக உறுதிசெய்யப்பட உள்ளது.
அதே போன்று பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டால் இரு பிரதான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதாவது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் யாழ் – இந்திய கலாசார மையத்தின் திறப்பு விழா என்பனவாகும்.
இந்த இரு விடயத்திலுமே இலங்கை சாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ். இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும்.
அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்த மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.
எனவே தான் அனைத்து விடயங்களிலும் இருதரப்பு புரிதலுடன் செயற்படுவதில் டெல்லி மிகுந்த பொறுமையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.
1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.
அதாவது கலாச்சார மையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரித்தல் போன்ற விடயங்கள் குறித்து காணப்பட்ட இருதரப்பு கருத்து வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணமாகியது.
ஆனால் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எனவே பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் சாத்தியப்பட்டால் யாழ் – இந்திய கலாசார மையம் திறந்து வைக்கப்படும்.
அதே போன்று பலாலி விமான நிலையம். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையம் இந்திய அனுசரணையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற வேண்டும் என்பதே இந்தியாவின் ஆர்வமாக உள்ளது.
ஆனால் தற்போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் கொவிட் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடங்கி போயுள்ளன.
எனவே விமான நிலையத்தின் செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் டெல்லியின் பணிப்பாக உள்ளது.
எனவே பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் இந்த இரு விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.