மாகாணசபை தொடர்பான புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து அமைச்சர்களால் வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால், கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது வரையில் மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு இரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். எனினும் ஸ்திரமான மாகாணசபைகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு , ஒரு மாகாணத்தில் மாவட்டமொன்றுக்கு வழங்கப்படும் போனஸ் ஆசனங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு புதிய சட்டமூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்மைய 3 மாவட்டங்கள் காணப்படுகின்ற மாகாணங்களுக்கு , உதாரணமாக மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 6 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். அதே போன்று இரு மாவட்டங்களைக் கொண்ட வடமத்திய மாகாணத்திற்கு இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 4 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். இதன் மூலம் ஸ்திரமானதொரு மாகாணசபையை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.
அதேபோன்று ஸ்திரமான மாகாணசபையை ஸ்தாபித்தல் , பிரதேசத்திற்கு பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களை நியமித்தல் ஆகிய இரு காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு , 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு குறித்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒரு தொகுதியில் ஒரு கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நியமிப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரணி தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையால் இது தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் பல கட்சிகள் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துபவையல்ல. எனவே தான் கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார் என்றார்.