பேரணி இலக்கைச் சென்றடைந்தது- பொலிகண்டியில் இறுதிப் பேரெழுச்சிப் போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.

பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச்சென்றனர்.

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை மணியளவில் வந்தடைந்துள்ளது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடக்கு, கிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை வந்தடைந்துள்ளது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகைச் சற்று இலங்கை தீவை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.