பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவுரை

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்சுகு அசகவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்ததுடன் அன்றைய தினமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது சமூக, நிதி மற்றும் கடன் ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து வழங்கும் என்று அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கை விஜயம் குறித்துத் கருத்து வெளியிட்டுள்ள அவர் ‘இலங்கைக்கு மீண்டும் வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கிமிமஸா றருமிசுவுடன் கடந்த 1991 ஆம் ஆண்டில் முதன்முறையான இந்த அழகிய நாட்டிற்கு வருகைதந்திருந்தேன். அப்போது நான் அவரது சிரேஷ்ட ஆலோசகராவேன்.

சுமார் 30 வருடங்களின் பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எமது வருடாந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு இலங்கை தயாராகின்றது. அந்தவகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் என்ற ரீதியில் நான் இப்போது இலங்கை எனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குச்சென்று அதனைப் பார்வையிட்ட அவர், ‘ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்தக்கூட்டம் இங்குதான் நடைபெறவிருக்கின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதன்முறையாக பிராந்திய அதிகாரிகள் நேரடியாக இங்கு வருகைதரவிருக்கின்றார்கள்.

அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டம் தெற்காசியாவின் நடைபெறும் இரண்டாவது முறை இதுவாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியமாகும். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைத்தொடரந்து உருவான பல்வேறு சவால்களை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்திருக்கின்றது.

பணவீக்கத்திற்கு மத்தியில் நிதி மற்றும் வெளியக இருப்பை சரியான மட்டத்தில் பேணுவதற்கென எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருக்கின்றது என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்தக்கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ‘கொவிட்-19 தொற்றுப்பரவலுக்குப் பின்னரான உலகத்தில் காலநிலை மாற்றத்திற்கு இசைவான மீள்தன்மையுடைய பசுமைப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.