போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி முதல் நடந்த அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து, தகுந்த தண்டனையைப் பரிந்துரைக்க, உரிய அதிகாரங்களைக் கொண்ட ‘உண்மை ஆணையத்தை’ நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் கேலிக்கூத்து முயற்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.