இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.
ஏ9 வீதியில், இரணைமடுவுக்கு அண்மையாக போர்க்களம் போல காட்சியளித்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இரணைமடு சந்தியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து, கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்த போது, பொலிசார், விசேட அதிரடிப்படையினர் வீதியின் குறுக்கே தடுப்பு அமைத்து, பேரணியை தடுத்தனர்.
இந்த பேரணியில் பங்கேற்க 5 பேருக்கு நீதிமன்றம் தடைபிறப்பித்திருந்த நிலையில், பொலிசார் பேரணியை நகர அனுமதிக்கவில்லை.
பேரணியின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், தடியடியும் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தரதரவென வீதியில் இழுத்து செல்லப்பட்டனர்.
மாணவர்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் முயன்றனர். பொலிசாரால் இழுத்து செல்லப்பட்ட மாணவன் ஒருவரை காப்பாற்ற சிறிதரன் எம்.பி, அவரின் மேல் கவசம் போல படுத்து காப்பாற்ற முயன்றார். பொலிசார் அவரை இழுத்து எடுக்க முயன்றனர்.
இந்த இழுபறியின் போது பொலிசார் தன்னை தாக்கியதாக சி.சிறிதரன் குற்றம்சாட்டினார்
இன்றைய நாள் பொலிஸார் தாங்கள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் அராஜகத்தை கோரமுகத்தை சர்வதேச சமூகத்தின் கண்களிற்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைகழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸார் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர் பல மாணவர்கள் காவித்தூக்கிச்செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச்செல்லப்பட்டார்கள் தூக்கி வானிலே வீசப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் ஊர்வலம் வருகின்றபோது தண்ணீர்தாரை வாகனத்துடன் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய பொலிஸார் மிகவும் மிலேச்சத்தனமாக அடாவடியாக நடந்துகொண்டார்கள்.
மிகவும் ஜனநாயக அடிப்படையில் தனக்கிருக்கின்ற மனித உரிமைகளின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்த பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் மீது மிகவும் மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் பொலிஸார் நடந்துகொண்டமை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை இலங்கையில் பொலிஸாரின் அடாவடித்தனத்தை அடையாளப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலமாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள் இதுவெல்லாம் நடைபெற்ற பின்னர் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட விடயத்திலே அந்த மக்கள் 3-30 மணிவரை காத்திருந்தார்கள் அவர்களை விடுதலை செய்யும்வரை வெளிக்கிடமாட்டோம் என காத்திருந்தார்கள் நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனும் பல்கலைகழக மாணவர்களும் பொலிஸ் நிலையம் சென்று அவர்களை விடுவித்துக்கொண்ட வந்த பின்னர்தான் இந்த போராட்டம் முடிவிற்கு வந்திருக்கின்றது எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் அதற்குரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன நான் அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.