போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியவை தடை செய்யுங்கள் – அவுஸ்திரேவியாவிடம் கோரிக்கை!

அவுஸ்ரேலியா வந்த சிறிலங்கா ஜெனரல் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேநேரம், அவுஸ்ரேலியாவின் புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் அவரை தடை செய்யும் நேரம் இதுவென மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய சிறிலங்காவில் நடந்த கொடூர செயல்களுக்கு தலைமை தாங்கி நடாத்தியமைக்காகவும், அவுஸ்ரேலியாவிற்குள் அவரை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை அவுஸ்ரேலிய காவல்துறை விசாரணை செய்யத் தவறியதைத் தொடர்ந்தும் அவர் மீது தடைவிதிக்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலியத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த அமைப்புக்கள் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியாவுக்கும் ஏனைய அரசாங்கங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே ஜயசூரியாவைத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. மக்னிஸ்கை தடைகள் என்று அறியப்படும் அவுஸ்ரேலியாவின் புதிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி ஜயசூரியாவைத் தடைசெய்யுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் 100 பக்கங்களைக் கொண்ட முதலாவது வேண்டுகை கடந்த 2022 மார்ச் 4ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு மே இல் போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியா தன் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக அவுஸ்ரேலியாவுக்கு வந்ததுடன் மட்டுமன்றி மெல்போணில் நடந்த பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம், நீதி சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம், மனித உரிமைகள் சட்ட மையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து அவுஸ்ரேலியச் சட்டத்திலுள்ள சர்வதேச சட்டஅதிகார வரம்பின் கீழ் ஜயசூரியா மீது அவசர குற்ற விசாரணையை நடத்துமாறு அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறைக்கு எழுதின.

தொடர்ந்து, கொடுமைகள், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பியவர்கள், சாட்சிகள் 40 பேருடைய ஒருதொகுதி வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை வரைவினையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தர்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்ட அதிகார வரம்பிற்குள் இருந்தும், அவர் மீண்டும் திரும்பவும் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் பாரதூரமான சர்வதேசக் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கைகளை சிரத்தை எடுத்து விசாரணை செய்யத் தவறியதன் ஊடாக பொறுப்புக்கூறலை சிறுமைப்படுத்துவதாக அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை மீது இவ்வமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

கடந்த 2019 ஒக்ரோபர் பிற்பகுதியிலும் நவம்பரிலும் ஜயசூரியா மீண்டும் அவுஸ்ரேலியாவுக்கு வந்திருந்தார் என்றும், பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை, அவுஸ்ரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம், கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றின் தவறான நடவடிக்கைள் மீது விசாரணை நடத்துமாறு இவ்வமைப்புக்கள் அழைப்பு விடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விசாரணைக் குழு ஒன்று அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதையே இப்பாரதூரமான தவறுகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. அதன் மூலமாக சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த விசாரணையாளர்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் விரைந்து செயற்பட்டு உடனடியாக பதில்தரமுடியும்.

2009 மே மாதத்தில் முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றின் பாரதூரமான மீறல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இட்டுச்சென்ற பரவலான நடவடிக்கைகளுக்கு அல்லது தவறுகளுக்கு ஜயசூரியா பொறுப்பானவராவார்.

பின்வரும் நடவடிக்கைகளுக்கு அவர் அங்கீகாரம் வழங்கி, மேற்பார்வை செய்துள்ளார்:

-சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள்,

-பாதுகாக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள் உட்பட சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள்,

-பொதுமக்கள் கொலைகள்,

-வலிந்து காணாமல் ஆக்குதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள்,

2017 ஆகஸ்டில் ஜயசூரியா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குரிய தூதுவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் பிரேசில், சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளிலுள்ள வழக்குத் தொடுனர்களுடன் இணைந்து சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் அவர் மீது குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் சிறிலங்காவுக்குத் தப்பியோடினார்.

ஜயசூரியாவின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடைகளை நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இந்த தடைக்கோரிக்கையில் உள்ளடங்கும். இது அவுஸ்ரேலியாவின் மக்னிஸ்கை சட்டத்தின் கீழ் உள்ளது.

ஜயசூரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்து இங்கு மூன்றாம் நிலை படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப்போர் முடிந்து ஒரு தாசாப்தம் கடந்த நிலையிலும், போரில் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குக் காரணமென எந்தவொரு சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படவில்லை. உலகளாவிய சட்ட அதிகார வரம்புக் கோட்பாடு என்பதைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கு எந்தவொரு பொறுப்புக்கூறும் பொறிமுறைகளும் இல்லை. ஆகவே, பொறுப்புக்கூறலில் காணப்படும் இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கும், இந்த ஜெனரல்கள் அனுபவித்துவரும் தண்டனையிலிருந்து விலக்களிப்பினை இல்லாமல் செய்வதற்கும் இத்தடைகள் உதவும். இது சிறிலங்காவின் ஜெனரல்களைத் தடைசெய்யவேண்டிய நேரம் இது.

வன்னியின் பாதுகாப்பு வலயத்திலிருந்து உயிர்தப்பி வந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்வருமாறு கூறினார்:

‘போரின் இறுதிக்கட்ட நேரத்தில் நான் ‘பாதுகாப்பு வலயத்தில்| இருந்தேன். நான் பயங்கர நிகழ்வுகளை நேரில் கண்டேன். போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதிலும், அதன் ஆறா வடுக்களும் மனப்பாதிப்புக்களும் இன்னமும் என்னுடைய வாழ்க்கையைப் பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. குற்றமிழைத்தவர்கள் எவ்விதமான வருத்தமும் இன்றி அல்லது தாம் செய்த தவறுகளுக்கு விமோசனம் தேடாமல், சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியும் என்பதை நினைக்கும்போது எனக்கு வலிக்கின்றது. நீதிக்கான வேட்கையில், தவறு செய்பவர்களுக்குரிய இச்சலுகைகள் மறுக்கப்படவேண்டும்.’

தமிழ் அகதிகள் சபையைச் சேர்ந்த திரு. அரண் மயில்வாகனம் பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவின் போரிலிருந்தும் அங்கு நடந்த சித்திரவதைகளிலிருந்தும் உயிர்தப்பி வந்த பல நூற்றுக்கணக்கானோர் எங்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் அவுஸ்ரேலியக் குடிமக்களாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் ஜகத் ஜயசூரியாவின் தலைமையின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் குற்றச்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியவர்கள். அவர் செய்த குற்றச்செயல்களுக்கு எவ்விதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மனிதராக அவுஸ்ரேலியாவில் அவரை அனுமதித்தது அபத்தமானது.

உயிர்தப்பியர்வகளுக்கு அவுஸ்ரேலியா செவிமடுத்து, ஒன்றில் அவரைத் தடைசெய்யவேண்டும் அல்லது அவர் மீது விசாரணை தொடரவேண்டும். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவிலிருந்து வரும் போர்க் குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கபூமியாக இருக்கக்கூடாது – குறிப்பாக இங்கே வாழும் பெரியளவிலான தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைக் கடப்பாட்டினை மதிக்கவேண்டும் என்று தமது அரசாங்கத்தை எதிர்பார்க்கும் வேளையில் இது நிகழ்ந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சொந்த நாடு நீதிவழங்க விருப்பமின்றி இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உண்மையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான கருவியாக மக்னிஸ்கை சட்டங்கள் காணப்படுகின்றன.

‘சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம் அமைப்பின் நினைவேற்றுப் பணிப்பாளர் றவான் அரவ் பின்வருமாறு கூறினார்: ‘

ஜகத் ஜயசூரியா தான் இழைத்த குற்றங்களுக்காக ஒரு நாள் நீதிமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிவரும் என்று நாம் நம்புகின்ற அதேவேளையில், அவர் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளில் அவர் வகித்த வகிபாகத்திற்காக அவரை தடைசெய்ய வேண்டும் என்று நாங்கள் அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். அவருடைய குற்றச்செயல்களில் பாதிகப்பட்டு உயிர்தப்பி வந்த பலர் அவுஸ்ரேலியாவை தாயகம் என்று அழைக்கின்றார்கள். இப்பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய மற்றும் இதர நாடுகளுடன் இணைந்து சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பான ஜயசூரியா மீதும் இதர சிறிலங்காவின் ஜெனரல்கள் மீதும் தடைகளை விதிக்கவேண்டும்.’

‘பாரதூரமான ஒரு குற்றவியல் பரிந்துரையையும் அவுஸ்ரேலியாவில் போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சுதந்திரமாக நடமாடுகின்றார் என்ற எங்களது எச்சரிக்கையையும் கையாண்ட விதத்திற்கும் அவர்கள் இழைத்த தவறுக்கும் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறை பதில்கூறவேண்டும். அவர்களது இக்குழப்பத்தின் மீது ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். பல தடவைகள் எவ்வாறு ஜயசூரியாவால

அவருடைய ஆட்பரிசோதனையைத் தாண்டி பல தடவைகள் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு உள்நாட்டு அலுவலகம் பதிலளிக்கவேண்டும்.

‘நாங்கள் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறையை எச்சரிக்கை செய்து ஐந்து மாதங்களின் பின்னரும் அவர் மீண்டும் அவுஸ்ரேலியாவுக்குள் வந்துள்ளார் என்பது மனித குலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து விசாரணை நடத்துவற்கான அவுஸ்ரேலியாவின் பொறுப்புக்கு விழுந்த ஒரு அவமானமாகும்.

அவுஸ்ரேலிய வாழ் தமிழ்ச் செயற்பாட்டாளராக மருத்துவர் சாம் பாரி பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவில் நடந்த கொடுமைகளிலிருந்து உள்ளாகி உயிர்தப்பி இங்கு வந்துள்ள தமிழர்கள் அவுஸ்ரேலியாவை தயாகமாகவே அழைக்கின்றார்கள். இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட சூத்திரதாரிகளை நீதியின்முன் கொண்டுவருமாறு அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகம் பல வருடங்களாக அறைகூறவல் விடுத்துவருகின்றது. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக ஜயசூரியாவை விசாரணைக்குட்படுத்தத் தவறியதன் மூலமாக, பொறுப்புக்கூறலுக்கான உண்மையான ஒரு கட்டமைப்பினை ஒருபோதுமே ஏற்படுத்தாத சிறிலங்காவில் எப்படி அவர்கள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கின்றார்களோ அதேபோன்றே அவுஸ்ரேலியாவிலும் குற்றச்சாட்டப்பட்ட சூத்திரதாரிகள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கலாம் என்ற செய்தியையே அவுஸ்ரேலியா வெளியுலகுக்கு அனுப்புகின்றது.’

‘தனது சர்வதேச கடப்பாடுகளுடன் இணங்கிக்செல்வதற்காக ஒரு உண்மையான செயற்றிறன் மிக்க கட்டமைப்பினை அவுஸ்ரேலியா ஏற்படுத்தவேண்டும். விசாரணை செய்வதற்கான தன்னுடைய கடப்பாட்டிலிருந்து தவறியதன் ஊடாக, அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவில் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை காட்டும் நம்பகரமான ஆதாரங்கள் உள்ள ஜயசூரியா போன்ற நபர்களைத் தடைசெய்யவேண்டும்.