‘முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் மனமுருகி கோரிக்கை’

நவம்பர் 27 ஆம் திகதி விளக்கேற்ற அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளனர். –எதிர்வரும் 27ஆம் திகதி எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, அதில் விழுந்து அழுது, எங்களது கவலைகளை ஞாபகப்படுத்த அந்த தினத்தினை தருமாறு அன்பாக வேண்டுகின்றோம் என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு எதிரில், வடக்கில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 7 பேர் ஆஜராகி இவ்வாறு கோரிக்கையினை முன்வைத்தனர்.

ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டத்திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இவ்வமர்வில் சமுகமளித்திருந்தனர் முன்னாள் போராளிகளை ஆணைக்குழு முன் கருத்து தெரிவிக்க மலை

யக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனும், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ,

நான் வவுனியாவில் வாழ்கின்றேன். யுத்த காலத்தில் நான் ஷெல்லடிபட்டு கால்களை இழந்துள்ளேன். எனது மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேறொருவரை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டாள். நான் வவுனியாவில் சில்லறைக்கடை ஒன்றை வைத்து எனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றேன். நான் கொழும்பில் பிறந்து வாழ்ந்தவன். எனது கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கற்றவன். எனது அடையாள அட்டை இன்றும் கொழும்பு முகவரியிலேயேதான் இருக்கின்றது. நான் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தேன்.

அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் காயங்களுடன் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்கால் ஊடாக வவுனியாவில் அகதி முகாமில் இருந்தேன். அதன் பின்னர் என்னை இராணுவத்தினர் கைதுசெய்து பல சிறைச்சாலைகளில் வைத்தனர். என்மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கொன்றினை வவுனியா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுதலையானேன். நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அரச கடன் ரூ. 2 இலட்சம் தரப்பட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பித்தேன்.

ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தினை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கேட்கின்றோம். எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி அதில் விழுந்து அழுது எங்களது கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தினைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

இராணுவம் வெற்றி தினத்தினை நினைவு கூர்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது உறுப்பினர்களுக்குக் கூட கோப்பாயில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு 2 தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்களது உறவுகளை நினைத்து மெழுகுத்திரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்? எங்களது இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நினைவு கூர அனுமதி தர மறுக்கின்றார்கள். இது சாதாரண எங்களது உரிமையாகும்.

நாங்கள் நினைவு கூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி.ஐ.டி யினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள். கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி.ஐ.டி. யினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும், எங்களது குழந்தைகளும் அச்சமடைகின்றனர்.

நாங்கள் தற்பொழுது இங்கு கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி.ஐ.டி.யினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர். எங்கள் வாழ்நாளில் இதுவே ஒரு ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும்.

நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் . நாங்கள் எங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாமல் உள்ளது. எங்களை முன்னாள் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினரும், அரச அதிகாரிகளும் சமூகத்திலிருந்து விலக்கி வைத்துப் பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல, எங்களை சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றனர். கணவன், மனைவியை இழந்த போராளிகளுக்கு இரண்டாம் திருமண முடிப்பதற்குக் கூட முடியாமல் உள்ளது. பாதுகாப்புப் படையினரும், சி.ஐ.டி. அதிகாரிகளும் வீடு வருவதால் எவரும் எங்களைத் திருமண முடிப்பதற்கு முன்வருவதில்லை.

எங்களது வடக்கிலுள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், காணாமல் போன எங்களது உறவுகளுக்கு அவர்கள் பற்றிய உண்மையான நிலை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கு பாரிய சம்பந்தமுள்ளது. பௌத்த மத சின்னங்கள் எனச் சொல்லி வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள், நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இவை நிறுத்தப்படல் வேண்டும்.

எங்களது காணி நிலங்களை மகாவலி, சொர்ணபூமி, வீடமைப்பு, வனவளம், சுற்றாடல் சூழலியல் என திட்டமிட்டு ஆக்கிரமிக்கின்றனர். சகல சமூகங்களும் சமாதானமாக, சமமாக வாழ வழிவகுக்கப்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வதாரம், வீடு, புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டங்களை உரிய முறைப்படி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.
ஆசியாவிலேயே கடல் நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகொப்டர் தயாரிப்புகளை செய்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. எவ்வாறு உதவி வழங்கப்படல் வேண்டும் என எங்களுக்குத் தெரியும். இன்றும் எங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துதான் வருகின்றோம். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது – என்று குறிப்பிட்டார்.