முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

மாணவியின் மரணத்தை கண்டித்து முல்லையில் ஆர்ப்பாட்ட பேரணி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் அண்மையில் சிகிற்சைக்கா அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த அந்த துன்பியல் நிகழ்வானது பொது மக்களிடையேயும், வைத்தியசாலையின் வட்டாரத்திலும் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.

மாணவி மரணித்த அந்த துன்பியல் நிகழ்வை கண்டித்தும் வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கை கண்டித்தும், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய அதே நேரத்தில் வைத்தியசாலையில் இருந்து இவ்வாறான உயிர் இழப்புகள் ஏற்படாதவாறு அதாவது வைத்தியர்களினதும் வைத்தியசாலையினதும் அசமந்த போக்கு மற்றும் பொறுப்பற்ற தனத்தால் எதிர்காலத்தில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படாதவகையிலும், மருத்துவத்திற்காக அனுமதிக்கப்படும் நோயாளர் மட்டில் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதனையும் வலியுறுத்திய முல்லைத்தீவு மாணவர்கள் மற்றும் மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 29/12/2025 திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவர்களது கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய போராட்டத்தின் உணர்வுகளையும், மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.