மே 9 முதலான தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் கடிதம்

மே 9 ஆம் திகதி மற்றும் அதன் பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கசார்பற்றதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்குமாறு சட்ட மா அதிபரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸாரின் விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கசார்பற்றதாகவும் எவ்வித தலையீடுகள் இன்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பக்கசார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதால், மக்களின் நம்பிக்கை பாரிய அளவில் பாதிக்கப்படும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது

  •  குற்றச்செயல் இடம்பெற்றபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்படாது, ஏனைய இடங்களில் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டமை
  •  அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமைய கைதுகள் இடம்பெறுகின்றமை
  •  2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் கைதுகள்
  • அடையாள அணிவகுப்பிற்கு முன்னர் சந்தேகநபர்களை நிழற்படம் எடுத்தல், அந்த நிழற்படங்களில் உள்ளவர்கள் சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்படுவதாக சந்தேகம்