சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியிடம் மனு ஒன்றை கையளித்தனர்.
மனுவை கையளிப்பதற்காக இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்குவது சம்பந்தமாக அரச தலைவர் கவனம் செலுத்தவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து கொள்வதற்கான இவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க, ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறையில் இருக்கவில்லை. கருத்து வெளியிடும் போது நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
குற்றங்களுடன் தொடர்பில்லாத அரசியல்வாதி என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்க முடியும். எனினும் அரசதலைவர் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.