ரணில் பக்கம் செல்ல பலர் தயார் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளடக்கம்

“ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியிலிருந்து 20 இற்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர். அவர்களுள் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் ” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“எதிரணியில் இருந்து வரும் உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பலமான அரசை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுவவுள்ளார்.

அந்த அரசுக்கு சர்வகட்சி அரசு, சர்வகட்சி ஆட்சி, தேசிய அரசு ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே, பலமிக்க அரசுக்கு இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை அதில் அங்கம் வகிக்கவுள்ள உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஜனாதிபதி சூட்டுவார்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத அரசை நிறுவுவதே ஜனாதிபதியின் விருப்பம். இதற்காகப் பல கட்சிகளை அவர் தனித்தனியே சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும், சில கட்சிகள் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றன. சர்வகட்சிகளை உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டத்துக்குக்கூட சில கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் சிக்குண்ட நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இது கட்சி அரசியல் செய்யும் நேரமல்ல. எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாமல் சேர விரும்பும் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு பலமிக்க அரசை நிறுவி பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகளைக் காணும் பயணத்தை ஜனாதிபதி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளார்” – என்றார்.