பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்கள் தொடர்பில் நல்லதொரு நிலைப்பாடு காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாம் ராஜபக்ஷர்களை பழிவாங்குவது குறித்து அவதானம் செலுத்தியது.ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.
ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.வெளிநாடுகளில் சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அரசியல் பிரசாரத்துக்காகவே ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.2019ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.ஒரு தரப்பினரது தவறான ஆலோனைகளினால் அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.
பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என்றார்