வத்திக்கானுக்கு விஜயமமானார் கர்தினால் அமெரிக்காவுக்கும் செல்வார் ?

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அங்கு புனித பாப்பரசர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

அத்தோடு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உலக ஆயர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதோடு விசேட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேராயர் அண்மையில் அமெரிக்க பேராயருடன் தொலைபேசியில் உரையாடியதோடு , அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றின் போது , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சிகளை மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை தமக்கு வழங்கப்படவில்லை என்றும் கடும் விசனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ்மா ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான கத்தோலிக்க தேசியக் குழுவும் பல்வேறு விடயங்களை தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் பேராயர் வத்திக்கான் விஜயம் செய்துள்ள அதே வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.