மாங்குளம் துணுக்காய் வீதியில் நேற்று சனிக்கிழமை (டிச. 3) சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு மேலும் இரு உத்தியோகத்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சமீப காலமாக பல்வேறு பிரதேசங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சி நடவடிக்கையாக நேற்று மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில், மாங்குளம் நகருக்கு அருகில் உள்ள வீதியினூடாக சென்ற இளைஞரை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இடைமறித்துள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்பட்டபோது “நீங்கள் யார்” என்று இளைஞர் கேட்டுள்ளார். அத்தோடு, அதிகாரிகளிடம் பணிக்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறும் கூறியுள்ளார். எனினும், அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் இளைஞரின் சகோதரரும் அவ்விடத்துக்கு வந்துள்ளார். அவரும் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்க, இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர்.
அதன்போது சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதன் பிறகும் “வீதியால் செல்பவர்களை சிவில் உடையில் இடைமறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என இளைஞர் கேள்வியெழுப்ப, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வேளை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து மாங்குளம் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டபோது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரின் சகோதரர் தெரிவிக்க, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து, இளைஞரின் சகோதரரை கைதுசெய்துள்ளனர்.
அதனையடுத்து இரண்டு அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலுக்குட்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீருடையின்றி சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால், அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பொறுப்பின்றி கடமையாற்றும் அதிகாரிகள் மீது உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாரி பகுதியில் திணைக்கள சீருடை அணியாத நிலையில், சிவில் உடையில், குறிப்பாக, ஒருவர் (ஜம்பர்) கட்டை காற்சட்டை அணிந்து, கணவர் வீட்டில் இல்லாதபோது மனைவி, பிள்ளைகள் மட்டுமே இருந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்து, சோதனையிட்டுச் சென்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பல இடங்களில் திருடர்களும் அதிகாரிகள் என பொய் கூறி வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.