ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது.
தீர்மானத்தின் இறுதி வரைபு தொடர்பில் பிரித்தானியா பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுழற்சி முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
எனினும் தீர்மானம் வலுவற்றதாக உள்ளதாகவும், அதில் வலுவாக சொற்கள் சேர்க்கப்பட்டால், மேற்குலக நாடுகள் குறிப்பாக ஸ்கன்டநேவியன் நாடுகள் தமது ஆதரவுகளை வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரஸ்யா, சீனா, கியூபா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவை வழங்கி வருகின்றன. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு சிறீலங்கா முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல ஆண்டுகளாக தனது விடுதலைக்கு போராடிய கியூபா தற்போது ஒரு இனஅழிப்பு நாட்டுக்கு ஆதரவாக செயற்படுவது தமிழ் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.