விடுதலைப் புலிகளின் தலைவர் தந்த வாக்குறுதி: -காலம் கடந்து ஹக்கீம் எம்.பி வெளியிட்ட தகவல்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெரு, முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

. இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சந்தித்தேன். நோர்வே ஏற்பாட்டாளர்கள் மூலமாக எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு அவரை சந்திப்பதற்காக அறிவிப்பு வந்திருந்தது.

விசேட வானூர்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு எனது தலைமையில் கிளிநொச்சியில் அவரை சந்திப்பதற்காகச் சென்றோம். புதுக்குடியிருப்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஒருங்கு செய்யப்பட்டிருந்தன.

ஏறத்தாழ 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நாங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நேருக்கு நேர் அமர்ந்து தமிழ், முஸ்லிம் விவகாரம் தொடர்பில் கதைத்திருந்தோம். அப்போது எங்களுடன் அன்டன் பாலசிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.

அவர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” எனக் கூறியிருந்தார். அதை நாங்கள் பேசுமளவுக்கு அவர்கள் வைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் உணர்வுபூர்வமாக அதனைக் கூறினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தூதுக்குழுவில் 6 தடவைகள் வெளிநாடுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் நானும் கலந்துக் கொண்டவன் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் நடந்த விடயத்தை பற்றி பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

அதனை எவ்வாறாவது மீள சரி செய்துவிட வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களிடம் பல விடயங்களை பேசினோம். இதன்போது, நான் மிக முக்கியமாக ஒரு விடயத்தை விடுதலைப் புலிகளின் தலைவரோடு பேசினேன்.

அந்த நேரத்தில் எங்களுக்கு இருந்த பிரச்சினைகளுள் ஒன்று தான் முழு தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பிறகு, எல்லா இடங்களிலும் சாரிசரியாக மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுகளை மேற்கொண்டு புலிகளை மக்கள் வரவேற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருபுறம் பீதியும், மறுபுறம் அச்சமும், விடுதலையும் என எல்லாம் கலந்துவிட்ட மாதிரியான ஒரு நிலைவரம் நிலவிய காலப்பகுதியில் பல இடங்களில் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டிருந்தது.
புலிகளின் ஊடுருவலை தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் எடுக்கும் நிலைமை காணப்பட்டது.

அரசாங்கத்தின் மூலம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு சர்வதேசத்திடமும் அதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் கூட, இவ்வாறு வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமை கடுமையாகத் தளைத்தோங்கி இருந்தது.

மேற்படி சம்பவத்தையும் ஓர் அம்சமாக எடுத்து தலைவர் பிரபாகரனிடம் பேசி இருந்தேன். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் இப்போது தான் கிழக்கில் அவர்கள் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களிடத்தில் வரி அறவிடுவது நியாயமற்றது என்பதை முறையிட்டோம்.

அதற்கு அவர், அருகிலிருந்த அன்டன் பாலசிங்கத்தோடு கதைத்துவிட்டுச் சொன்னார், “தமிழ் வர்த்தகர்களிடமும் இவ்வாறு வரி வசூலிக்கவே செய்கின்றோம். ஆகவே தான் முஸ்லிம்களிடத்திலும் அதனை கேட்கின்றோம்.

இத்தனை போராளிகள் எங்களிடத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய செலவுகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்காகவே இத்தகைய வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களிடத்தில் வரி விதிக்காமல் போனால் தமிழர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவர்களிடத்திலும் வரி வசூலிக்கின்றோம்” என்றார்.

அதற்கு நான் அவரிடத்தில் சொன்னேன் “முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களின் சார்பில் எதுவும் செய்துவிடவில்லை. போதாக்குறைக்கு இருந்த முஸ்லிம்களையும் விரட்டிவிட்டீர்கள் என்பதே பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்களின் மனப்பதிவாகவுள்ளது.

மீண்டும் அவர்கள் இக்கட்டுக்களுக்கு மத்தியில் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களிடத்தில் கோரப்படும் வரிப் பணத்தை ஒரு கப்பம் மாதிரியாகவே பார்க்கின்றார்கள்” என்றேன்.

அதற்கு அவர் உடனே “ நீங்கள் கூறுவது சரி. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாளையிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களிடத்தில் நாங்கள் வரி அறவிட மாட்டோம். அதனை நீங்கள் என்னுடைய வாக்குறுதியாக எடுக்கலாம்” என உறுதியளித்தார்” என்றார்.