உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியில் மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகையினை அகற்றியமை தொடர்பில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை புதன்கிழமை (18) மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டிருந்தது. இந் நிலையில் மாவட்ட அவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் சம்பிரதாய பூர்வமாக குறித்த வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீதியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடனான பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.
அவ் விளம்பரப் பலகை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தின் தாபனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடன் அகற்றுமாறு தவிசாளர் பணித்திருந்தார். உடனடியாக அகற்றப்படாத நிலையில் குறித்த வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப்பலகையினை தவிசாளர் அகற்றியிருந்தார்.
இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான விளம்பரப் பலகையினைக் காணவில்லை எனத் தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை அச்சுவேலி பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுத்தனர். அவர் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாக தன்னைக் கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக நீதிமன்ற முன் பிணைக்கு விண்ணப்பம் செய்து கைதில் இருந்து தவிசாளர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார்.
கடந்த வழக்குத் தவணையின் போது போது தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதேச சபையின் உரிய அனுமதிகளைப் பெற்றுச் செயற்படுவதாகவும் தவிசாளர் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். இந் நிலையில் வழக்கினை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிலைப்பாட்டை மன்றுக்கு தெரியப்படுத்துமாறு மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் நாளை புதன்கிழமை (18) திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ் வழக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தணிகள் குழாம் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது