இலங்கைப் பொலிஸாருக்கு சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கைப் பொலிஸாரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான ‘பொதுத்தொடர்பு மேம்பாட்டு’ உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்று ஸ்கொட்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை ஸகொட்லாந்து பொலிஸ் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமகஜர் ஒன்றையும் அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ (சித்திரவதைகளிலிருந்து விடுதலை பெறல்) என்ற அமைப்பு, உலகளாவிய ரீதியில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதுடன் அவர்களது உரிமைகளுக்காகவும் போரடிவருகின்றது.
அவ்வமைப்பு அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் ‘ஸ்கொட்லாந்து பொலிஸுக்குக் கூறுங்கள்: இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணையுங்கள்’ என்ற தலைப்பில் பொதுமகஜர் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான அச்சுமீறல்களுடன் இலங்கைப் பொலிஸார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்று அந்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வாழ்பவர்கள், சித்திரவதைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான அனுசரணையைத் தமது அமைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தால், ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமது இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பொதுமகஜரைப் பூரணப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை வெளிக்காட்டுமாறும் அவ்வமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
சுமார் 1000 பேரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுமகஜரை தற்போதுவரை (நேற்று நண்பகல்) 204 பேர் பூரணப்படுத்தி, இலங்கைப்பொலிஸாருடன் ஸ்கொட்லாந்து பொலிஸார் இணைந்து பணியாற்றக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை இம்மகஜர் தொடர்பில் ‘ப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது. ‘பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்கப்படக்கூடாது.
இலங்கைப் பொலிஸ் பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதுடன் சிறுபான்மையின சமூகத்தின்மீது அடக்குமுறையைப் பிரயோகித்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறிருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான ஊதியத்தை போரிஸ் ஜோன்ஸனின் அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸுக்கு வழங்குகின்றது’ என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், இதுவரையில் மனித உரிமைகள் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான பொதுத்தொடர்பு மேம்பாட்டு உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்றும் அவ்வமைப்பு அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.