ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கு தற்போது எந்தளவிற்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெறுவது இலகுவானதொரு விடயமல்ல.
எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களில் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற தவறால் கொழும்பில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அதற்காக கொழும்பு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.
இவ்வாறு கட்சியை மறுசீரமைப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தேர்தல் முடிவுகள் மக்கள் கைகளிலேயே உள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் , நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தில் தற்போது சுதந்திர கட்சிக்கு எந்தளவு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
எனினும் இதனை எண்ணிக்கொண்டு நாம் ஒருபோதும ஏமாந்து விட மாட்டோம். அடுத்தடுத்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.
பிரதேசசபை தேர்தலானாலும் , மாகாணசபை தேர்தலானாலும் , பாராளுமன்ற தேர்தலானாலும் சு.க தனித்தே போட்டியிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தேர்தலின் பின்னர் எமது கொள்ளைகளுடன் இணக்கப்பாட்டினை எட்டும் எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைப்பதற்கு தயாராகவே உள்ளோம்.
அதற்காக புதிய சக்தியுன் சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினைக் கோருகின்றோம் என்றார்.