அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் அதிபர் ரணில்விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை அதிபர் 30 ஆக அதிகரிக்க முடியும்.

முன்னதாக, அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கிடைத்த தகவல்களின்படி, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.