அமைச்சர்களின் வெளிநாட்டு பயணக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​தினசரி 40 அமெரிக்க டொலர்களில் இருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்படும் சாதாரண கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவோ அல்லது வெளிநாட்டு விவகாரங்களுக்காகவோ வெளிநாடு செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைத்து 10 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.