அரசியல் தீர்வில் அமெரிக்க – இந்திய கூட்டு?

சுமந்திரன் பங்குகொள்ளும் விடயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இப்படித்தான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளையும் நோக்க வேண்டும். சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்தே இவ்வாறான சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. பின்னர், சுமந்திரன் தரப்போடு, உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இணைந்த போது, மேலும் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டன. இறுதியில் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணமே ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுமளவிற்கு நிலைமைகள் மாறியது.

சுமந்திரன் என்னும் தனிநபர் தொடர்பான சர்ச்சைகளை ஓரு புறமாக வைத்துவிட்டு – விடயங்களை ஆழமாக நோக்க வேண்டியதே இப்போது முக்கியமானது.
சுமந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதான செய்தி வெளியான சூழலில்தான், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, டி.பி.எல்.எப் (புளொட்) மற்றும் விக்கினேஸ்வரன் தரப்பு ஆகியோர் இணைந்து, இந்தியப் பிரதமர் மோடியிடம் – அதாவது இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசு கட்சியையும் இணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் தொடர்பில் ஆராயும் முடிவுடன் குறித்த சந்திப்பு கலைந்தது.

இதனடிப்படையில் உடனேயே ஒரு கொன்ஸ்பிரசி (சதிக் கோட்பாடு) அரசியலும் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதாவது, இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும் முயற்சியை மழுங்கடிக்கும் வகையிலேயே, சுமந்திரனின் அமெரிக்க பயணம் இடம்பெறுகின்றது. இது இந்தியாவை விட்டுவிட்டு தனித்து ஓடுவதற்கான முயற்சியென்றும் சிலர் பேச முற்பட்டனர். தமிழ் சூழலில் எப்போதுமே இ;வ்வாறான கொன்ஸ்பிரசி அரசியலுக்கு பஞ்சமிருந்ததில்லை.

ஆனால் சுமந்திரன் கனடாவில் பேசுகின்ற போது, இந்திய – அமெரிக்க கூட்டின் மூலம் அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்;திருக்கின்றார். அதே வேளை தமது பயணம் தொடர்பிலும், தங்களுடைய கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அமெரிக்காவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளை சுமந்திரன் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு கருத்து முக்கியமானது. அதாவது, இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைந்திருக்க வேண்டுமென்பது தொடர்பில் பேசிவருகின்றது. இந்த அடிப்படையில் உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசானா இந்தியாவும் அரசியல் தீர்வு விடயத்தில் சேர்ந்தியங்கும் வகையிலான முயற்சிகளிலேயே தாம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் இங்குள்ள கேள்வி – அது எப்படியான தீர்வு? ஒரு வேளை இந்திய – அமெரிக்க கூட்டில் ஒரு புதிய தீர்வாலோசனை முன்வைக்கப்படுமானால் அதனை கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா – ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக சுமந்திரனிடம் பதில் இருக்காது. ஒருவேளை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம் என்னும் பதிலில் அவர் சரணடையலாம். அது ஒரு இலகுவான பதில்.

இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் விவகாரம் என்று வருகின்ற போதெல்லாம் – இந்தியாவின் பார்வை, 13வது திருத்தச்சட்டத்தின் மீது மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் 13இற்கு அப்பால் ஒரு விடயத்தை வலியுறுத்துவதற்கான உரித்தை இந்தியா கொண்டிருக்கவில்லை. அப்படியான ஒன்றை புதுடில்லி வலியுறுத்த வேண்டுமாயின் – இந்தியா அதன் பலத்தை பிரயோகிக்க வேண்டும்.

ஏனெனில், அப்படி பலத்தை பிரயோகித்ததன் மூலம் வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறான பலத்தை பிரயோகித்த போதும் அது சிங்கள – தமிழ் இரண்டு தரப்புக்களதும் எதிர்ப்பையே இறுதியில் சம்பாதித்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படியான ஒன்றல்ல. எனவே, இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு தீர்வாலோசனையை முன்வைப்பதென்பது, மேடையில் பேசுவது போன்று சாதாரணமான ஒரு விடயமல்ல.

ஒருவேளை, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் கூட, அங்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் ஒரு அரசியல் அஸ்திபாரமாக இருக்க முடியும். இல்லாவிட்டால், அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் இலங்கையுடன், ஒரு புதிய ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும். அதாவது, இன்றைய புதிய உலக அரசியல் போக்கிற்கு அமைவாக ஒரு புதிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அதில் அமெரிக்காவின் நலன்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியான ஒரு விடயம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மட்டும்தான், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்கின்ற நிலைமை ஏற்படும். ஆனால் இவ்வாறானதொரு நிலைமை தற்போதைக்கு ஒரு போதையூட்டக் கூடிய கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏனெனில் கொழும்பின் ஆட்சியாளர்களை – முக்கியமாக சிங்கள – பௌத்த கருத்தியல் ஆதிக்கத்தின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் தென்னிலங்கை மக்களை பாரதூரமாக விரோதித்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவோ, இந்தியாவோ எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை. அமெரிக்கா, அதன் மனித உரிமை சார்ந்த அழுத்தங்களை தொடரும். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் அதிகம் தலையீடு செய்யாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுமுறைகள், இருதரப்பு உறவுகளை பாதிக்காத வகையிலேயே அமைந்திருக்கும். ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த கேள்வியிலிருந்துதான் விடயங்களை தமிழர் தரப்புக்கள் நோக்க வேண்டும்.

அரசியல் தீர்வை ஒரு ஆசையாகவும் அல்லது வெறும் நம்பிக்கையாகவும் நோக்கக் கூடாது. ஆனால் தமிழ் சூழலில் காணப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களை நோக்கும்போது – எங்குமே ஆசையும் வெறும் நம்பிக்கையுமே மேலோங்கியிருக்கின்றது. இதன் காரணமாகவே அமெரிக்கா, இந்தியா தொடர்பில் அளவுக்கதிகமான கற்பனைகள் வெளிப்படுகின்றன.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னரைவிடவும் நெருக்கமான உறவு இருப்பது உண்மை. குறிப்பாக, மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைவிடவும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. இந்த பின்புலத்தில்தான், இந்தோ-பசுபிக் குவாட் நகர்வுகளை நோக்க வேண்டும். அதே வேளை இந்தியா அதன் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை பாரம்பரியத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

அமெரிக்கா சவாலாக பார்க்கும் நாடுகளுடன் கூட இந்தியா தொடர்புகளை பேணிவருகின்றது. உதாரணமாக ரஸ்யா. அதே வேளை முற்றிலும் சீன எதிர்ப்பு கொள்கைக்குள்ளும் இந்தியா இல்லை ஆனால், இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சீன நகர்வுகள் தொடர்பிலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

ஆசியாவில் சீனாவின் எழுச்சியென்பது இந்தியாவிற்கு நெருக்கடியான ஒன்றுதான். சீன எழுச்சியின் இலக்கு தெளிவானது, அதாவது, ஆசியாவில் ஒரு ஒரு மேலாதிக்க அதிகாரமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வது. சீன ஜனாதிபதி சி-ஐpன்பிங்கின் இலக்கு இதுதான். சீனாவின் ஆசிய மேலாதிக்க கனவானது, ஒரு உறையில் இரண்டு ஈட்டிகளை போன்ற உபாமாகவே இருக்கும். முதல் ஈட்டியில், அதன் இலக்கு ஆசியாவின் மீதான அமெரிக்க செல்வாக்கை நிர்மூலமாக்குவது.

இரண்டாவது ஈட்டியில் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை நிர்மூலமாக்குவது. இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின், ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கு வீழ்ச்சியுறக் கூடாது. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்சியுறுமாக இருந்தால், அதன் பின்னர் இந்தியாவினால் தனித்து சீனாவை எதிர்கொள்ள முடியாமல் போகும். இந்த மூலோபாய இலக்கின் அடிப்படையில்தான் இன்றைய அமெரிக்க – இந்திய கூட்டு நகர்வுகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில்தான் இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில்தான், இந்திய-அமெரிக்க கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இலங்கைக்கு விஐயம் செய்த, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, கொழும்பில் வைத்து சீனா தொடர்பில் காட்டமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இலங்கையின் இறைமையை சீனா நிலத்திலும் கடலிலும் மோசமாக மீறி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றானது, இலங்கையும் அமெரிக்க-சீன அதிகாரப் போட்டிக்குள் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது.

அண்மையில் வெளியான பென்ரகன் அறிக்கையில், சீனா ஒரு இராணுவ தளத்தை இலங்கைக்குள் நிறுவ முற்படுகின்றது என்று, குறிபிடப்பட்டிருப்பதையும் நாம் இணைத்தே வாசிக்க வேண்டும். பைடன் நிர்வாகத்தின் ஆசிய விவகாரங்களை கையாளும் உயர் அதிகாரியான ஹேர்ட் ஹம்பல், அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று அமெரிக்க-சீன மேலாதிக்க போட்டியை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, அமெரிக்க-சீன ஊடாட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிகாரப் போட்டியே இனி மேலாதிக்கம் பெறும்.

அமெரிக்க – சீன போட்டியென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே எழுச்சிபெற்றுவருகின்ற நிலையில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில் – ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேச அரங்கில் ஒரு மனித உரிமை விவகாரமாக கவனம் பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா வலியுறுத்திவருகின்றது. அதே வேளை புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவரப் போவதாக கோட்டபாயவின் அரசாங்கம் கூறிவருகின்றது. அரசியல் யாப்பின் பிரதான இலக்கு தமிழர்களுக்கு விசேட சலுகைகளை இல்லாதொழிப்பதுதான்.

13வது திருத்தம் ஓரளவு விசேட சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்களை துல்லியமாக கணித்தால், தென்னிலங்கையின் நகர்வுகள் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானது. புதிய அரசியல் யாப்பின் ஒன்றை இலக்கு, 13வது திருத்தத்தை இல்லாமலாக்குவதுதான் என்றால், அமெரிக்க – இந்திய கூட்டின் மூலம் அரசியல் தீர்வை பெறலாம் என்பது ஒரு கவர்சியான மேடைப் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். இந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு தமிழ் தலைமைகள் பயணிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில், ஒன்றில் இருப்பதை பாதுகாப்பது – முன்னோக்கிப் பயணிப்பது, இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நோக்க வேண்டும். இதுதான் சரியானதொரு அரசியல் தந்திரோபாயமாக இருக்க முடியும்.