சாணக்கியமற்ற ஈழத் தமிழர் அரசியல் – யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ரெலோவின் 11வது தேசிய மகாநாடு இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான, செந்தில் தொண்டமானும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய தொண்டமான் குறிப்பிட்ட விடயமொன்று என்னை கவர்ந்தது. அதாவது, போராட்டங்கள் உச்சத்தில் இருக்கின்ற போது நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்பார்கள். அதற்கு எங்களின் ஜயா சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் – நாங்கள் தோசை சுடுகின்றோம். தோசைக்கல் எங்களுடையதுதான் – அடுப்பும் எங்களுடையதுதான், அடுப்பை எரிக்க பயன்படும் நெருப்பும் எங்களுடையதுதான் (எரிவாயு) வீடும் எங்களுடையதுதான். அதற்காக எங்களுடைய வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, ஆறுதலாக வந்து தோசையை பார்த்தால் தோசை இருக்குமா?
அப்படித்தான் போராட்டங்களும், போராட்டத்தில் உச்சத்தில் இருக்கின்ற போதே, சிலதை விட்டுக்கொடுத்து எடுக்கக் கூடியவற்றை, எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் நாம் விடயங்களை சாதிக்க முடியாமல் போகும். ஏனெனில் போராட்டத்தின் வேகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது. தங்கள் ஜயா தங்களுக்கு கற்றுத்தந்த சாணக்கியத்தினால்தான், நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம் என்று தொண்டமான் கூறுகின்ற போது, எங்களுடைய மூத்த தலைவர்கள் என்போர் எங்களுக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத் தந்திருக்கின்றனர் என்னும் கேள்வியே என்னுக்குள் எழுந்தது.

எங்கள் ஜயாக்களும், எங்கள் அண்ணன்களும் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத்தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்? வரலாறு முழுவதும் முன்னோடிகள் விட்டுச் செல்கின்ற வழித்தடங்களிலிருந்துதான், அடுத்த தலைமுறை தனக்கான எதிர்காலத்தை ஆக்கிக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் நிலையோ சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை தமிழர்களின் மூத்த தலைமுறை விட்டுச் செல்லவில்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ, பிச்சை வேண்டாம் ஜயா – நாயை பிடியுங்கள் என்னும் நிலைமையை வந்தடைந்திருக்கின்றது. இதற்காக, நாம் எவரையாவது, குற்றம்சாட்ட வேண்டும் என்றால், நமது மூத்த தலைமுறை முழுவதையும் குற்றவாளிக் கூண்டில், நிறுத்துவதை தவிர வேறுவழியிருக்காது. ராஜதந்திரம் பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் ஒரு கூற்றை கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது நினைவுண்டு. அதாவது, ராஜதந்திரம் என்பது தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்வதல்ல என்பாராம். ஆனால் இன்று தமிழரின் அரசியல் நிலையோ தொடங்கிய இடத்தில் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ராஜதந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட தமிழ் அரசியல் சமூகம், அறியவில்லை என்னும் முடிவுக்கல்லவா நாம் வரவேண்டியிருக்கின்றது.

நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட விடயத்தை இந்த இடத்தில் நினைவுகொள்வது பொருத்தமென்று எண்ணுகின்றேன். அதாவது, போராட்டங்கள் பிழையில்லை ஆனால் நாங்கள் ஆரம்பிக்கும் போராட்டங்களை எப்போது முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரிய வேண்டும் – அவ்வாறில்லாது, நாங்கள் ஆரம்பித்த போரட்டத்தை இன்னொருவர் முடிப்பாரானால், அப்போது எங்களுக்கு சர்வ நாசமே மிஞ்சும். இந்த பின்புலத்தில் நோக்கினால் நமது போராட்டத்தை திருப்பிப்பார்த்தால் நமது கையறு நிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான அனுபவங்களுக்கு பின்னர் கூட நாங்கள் அரசியல் யதார்த்தங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுதான் கவலையானது. நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் சுலோகங்கள் மூலம் மக்களை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சி;க்கின்றோம்? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாமலேயே, நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கப்பல்கள் வருகின்றன, வெளிநாடு செல்ல விரும்புவோர் அனைவரும் ஏறலாம் என்றால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. மக்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியாத அரசியல் தலைமைகள், வெறும் சுலோகங்களை உயர்த்துவதில் என்ன பொருளுண்டு?

ஓரு சிறிய இனத்தால் ஆயுத போராட்டத்தில் அதிக காலத்தை செலவிட முடியாதென்று, அன்றைய சூழலிலேயே அரசறியவில் அறிஞர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் கூறியிருக்கின்றனர். எனது தேடலில், உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டது. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்காக நாங்கள் கொடுத்த விலையோ கணக்கிலடங்காது. உண்மையில் அன்றே இந்த உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், நாங்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. இது ஒரு வராலாற்றுப் படிப்பினை.
அமெரிக்க தத்துவஞானியான, ஜோர்ஜ் சந்தயாணாவின் கூற்று ஒன்றுண்டு. அதாவது, வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர். இது க.வே.பாலகுமாரனின் மொழிபெயர்ப்பு. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக அறியப்பட்ட க.வே.பாலகுமாரன் தனது கட்டுரையொன்றில் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் இந்தக் கூற்றை சிங்களவர்களை நோக்கியே பயன்படுத்தியிருப்பார். சிங்களவர்கள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்னும் தனது பார்வையை நிறுவுவதற்காகவே, அவர் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தக் கூற்று இப்போது யாருக்குப் பொருத்தமானது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டதல்லவா!
இறுதி யுத்தத்தின் போதான நிலைமைகளை பாவத்தின் சம்பளம் என்று பாலகுமாரன் வர்ணித்த கதையுமுண்டு. ஒரு வேளை, அவர் உண்மைகளை உணர முற்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம், அனைத்தும் கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்தே, இந்தியாவை நோக்கிச் சென்றார். இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ராஜீவ்காந்தி படுகொலை ஆகியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்ததுடன், கடந்தகாலத்தை பின்னுக்குவைத்து, பெருந்தன்மையுடன் தலையீடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால் இன்றோ இவற்றிலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத ஒரு குழுவினரோ, தொடர்ந்தும் அரசியல் விடலைகளாகவே தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே விடலைகளாகவே இருக்கலாம் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்கள் அறியாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுமல்லவா, அனைத்துக்கும் பின்னால் இழுபட்டுச் செல்லுபவர்களாக இருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வும் அதன் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். நாங்கள் எந்தளவிற்கு வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத இனமாக இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த பதின்நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பேசப்பட்டது. சற்று அனைத்தையும் திருப்பிப் பாருங்கள். சர்வதேச அழுத்தங்கள் இலங்கையின் குரல்வளையை நெருக்கப் போகின்றது, இனி அவர்கள் தப்ப முடியாது என்றெல்லாம் பேசப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சென்று வந்த பின்னர். அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளது என்றவாறு கதைகள் புனையப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலும் ஏராளமாக பேசப்பட்டது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாருக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் சண்டைகள் இடம்பெற்றன. எதனை எவ்வாறு உள்ளடக்குவது என்று தங்களுக்குள் மோதிக் கொண்டன கட்சிகள். மக்களோ, அனைத்தையும் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஏதாவது நடந்ததா? ஆனால் பதின்நான்கு வருடங்கள் சென்றுவிட்டன.

2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கையின் மீதான பிரேரணை கொண்டுவரைப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியா என்றொரு பிராந்திய சக்தி இருப்பதையே சம்பந்தனும் அவரது தலைமையில் இயங்கிய கூட்டமைப்பும் மறந்திருந்தது. ஆனால் ரெலோவின் முயற்சியில் 2022இல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமந்திரன் அதற்கு எதிரான கருத்துக்களையே பொது வெளிகளில் முன்வைத்தார். அவருக்கு அந்த முயற்சியில் ஆர்வமில்லை என்றே தெரிந்தது. முயற்சியில் ஆர்வமில்லையா அல்லது இந்தியாவை நோக்கி மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லையா? ஒரு வேளை மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசியதால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஆறுகட்சிகளின் தலைவர்களது கையெழுத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. உண்மையில் பத்துவருட கால, மேற்குலகம் நோக்கிய தமிழர் அரசியல் நகர்வுகளின் தோல்விதான், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்னும் நிலைமையை உருவாக்கியது. 2006இல் பாலசிங்கம் எவ்வாறு வேறு வழிகள் எதுவுமின்றி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சரியாக சிந்தித்தாரோ, அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சிந்தித்தன. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தியா இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நகர்விலும் இதுவரையில் தமிழர்களால் ஒரு படி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இதுதான் நமது இதுவரையான அரசியல் வரலாறு சொல்லும் உண்மை. இந்த உண்மையை புறம்தள்ளிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கியே சென்றிருக்கின்றோம். இனியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் தொடர்ந்தும் இப்படியே ஆதங்கப்பட்டுக் கொண்டு, அவ்வப்போது, சில எதிர்ப்புக்களை காண்பித்துக் கொண்டு, எங்களின் நாட்களை செலவிட்டுக் கொள்வதாகவே எங்கள் அரசியல் மிஞ்சும். காலப்போக்கில் தமிழ் தேசிய அரசியல் என்பது, வெறுமனே, யாழ் குடாநாட்டு அரசியலாகவே சுருங்கிப் போகும்.

நன்றி – தினக்குரல் கட்டுரை

கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? – நிலாந்தன்.

2014ஆம் ஆண்டு மன்னாரில்,முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது.ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார்.அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்…”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகளின் விளைவு என்ன? அப்படிச் சொன்ன சம்பந்தர் இப்பொழுது எங்கே நிற்கிறார்? அவருடைய முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டு உடைந்து போய்விட்டது.அதுமட்டுமல்ல அவருடைய சொந்த கட்சியே இப்பொழுது இரண்டாகி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல,அன்றைக்கு அப்படித் திமிராகச் சொன்ன சம்பந்தரை இன்றைக்கு அவருடைய சொந்த கட்சிக்காரர்களே மதியாத ஒரு நிலை.ஆம். “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.அவள் யாரையும் மன்னிப்பதில்லை”

இப்பொழுது தமிழரசுக் கட்சி உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.கடந்த வெள்ளிக்கு கிழமை கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின் பின் கட்சி நீதிமன்றதுக்குப் போக வேண்டிய வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளனவா?

ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைப்பதுண்டு.அதுவும் முடியாது போனால், விவகாரம் போலீஸ் நிலையத்துக்கோ,நீதிமன்றத்துக்கோ போகும்.தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்த்தால் அங்கே இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூத்தவர்கள் யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் சம்பந்தர், மாவை, குலநாயகம், கனகசபாபதி, சிவஞானம்… போன்றவர்கள் ஏதோ ஒரு பக்கம் உலாஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் நடுநிலையாக நின்று விவகாரத்தைக் கையாள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.சம்மந்தரும் மாவையும் கனகசபாபதியும் அதிகம் சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.குலநாயகமும் சிவஞானமும் அதிகம் சுமந்திரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவைத் தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களால் முடியவில்லை. அதன் விளைவாகத்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றது.

இப்பொழுதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால்,விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட மூப்போடும்;முதிர்ச்சியோடும்;பக்குவத்தோடும்; மிடுக்கோடும் கட்சிக்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

கொழும்பில் நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் வழக்கு தொடுத்த அதே காலப்பகுதியில், திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு இணக்கமானவர்கள் என்று கருதப்படுகின்றவர்களால் இரண்டு வழக்குகள் கொடுக்கப்பட்டன.தென்னிலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை சுமந்திரன் எதிர்க்கிறார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியை உடைக்கும் வேலைகளை அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு ஊடாகச் செய்கிறார் என்று அவருடைய எதிரணி அவரை குற்றம் சாட்டுகின்றது.

ஆனால் தான் அந்த வழக்குகளுடன் சம்பந்தப்படவில்லை என்று சுமந்திரன் மறுத்திருக்கிறார்.எனினும்,அவர்தான் எல்லாவற்றின் பின்னணியிலும் நிற்கிறார் என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது.அவருடைய பெயர் மேலும் கெட்டுக்கொண்டே போகிறது.

பிரச்சனை ஒரு சட்ட விவகாரம் ஆக்கப்பட்டதும் சிறீதரன் தன்னுடைய முகநூலில் “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதினார். அதன்பின் அவருக்குப் பதில் கூறுவது போல, சுமந்திரனுக்கு ஆதரவான வடமாராட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அதே வசனத்தை தனது முகநூலில் எழுதினார். இதில் யார் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? யார் அதர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? எது தர்மம்?

கட்சி பல ஆண்டுகளாக யாப்பை மீறி வழி நடத்தப்பட்டிருக்கிறது என்று சிவகரன் கூறுகிறார்.அவர் தமிழரசு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர்.பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்.பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகிய போது அவர் சுமந்திரனின் பக்கம் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் முன்வைக்கப்படுகின்றது.கட்சியின் யாப்பு நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் மீறப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே அது மீறப்பட்டு விட்டது.அதற்குக் கட்சியின் முக்கியஸ்தர்களாகக் காணப்பட்ட எல்லாச் சட்டத்தரணிகளும் பொறுப்பு.சிவகரனின் வார்த்தைகளில் சொன்னால்,கட்சிக்குள் “வழிப்போக்கர்கள்” தலையெடுத்ததே யாப்புக்கு முரணாகத்தான்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் யாப்பானது தமக்கு நீதியைத் தரவில்லை என்று கூறிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ள மூத்த பெரிய கட்சியானது தனது சொந்த யாப்பையே மீறிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சட்டத்தரணிகள் பலர் உண்டு. சட்டத்தரணிகளின் அரசியல் அல்லது அப்புக்காத்துக்களின் அரசியல் ஒரு மூத்த பெரிய கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

கட்சிக்குள்ளேயே விவகாரத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கட்சி தோற்றுப் போய்விட்டதைக் காட்டுகின்றது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் யாரும் அதைத் தீர்த்து வைக்கும் தகமையோடும் முதிர்ச்சியோடும் இல்லை என்பதையும் அது காட்டுகின்றது.கட்சிக்குள் மட்டுமல்ல கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்குப் பொதுவான யாரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

முன்பு கட்சிகளுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைந்த சிவில் சமூகங்கள் இப்பொழுது கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு விடயத்தில் தலையிடுவதாகத் தெரியவில்லை. வழமையாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் சிவகரன் இப்பொழுது சுமந்திரனுக்குச் சார்பானவராகப் பார்க்கப்படுகிறார்.ஆங்கிலம் பேசும் உலக சமூகத்துடன் அதிகம் இடையூடாடும் தமிழ் சிவில் சமூக அமையம்-இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அமைப்பு-அதுவும் தலையிடும் நிலமைகளைக் காணவில்லை.அந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான குருபரன் தமிழரசுக் கட்சிக்கு எதிரானஒரு வழக்கில் தோன்றுகிறார்.இவ்வாறு சிவில் சமூகங்கள் இரு தரப்பையும் ஒரு மேசைக்கு அழைத்துக் கொண்டுவரும் சக்தியற்றிருக்கும் ஒரு சூழலில்,மதத் தலைவர்களும் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.பொதுவாக சிவில் சமூகங்கள் முன்கை எடுக்கும் போதுதான் மதத் தலைவர்களும் அவற்றோடு இணைந்து செயல்படுவதுண்டு. இம்முறை சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்திருக்கின்றன.ஆனால் ஒரு கட்சிக்குள் பிணக்குகள் ஏற்படும்போது அதைத் தீர்ப்பதற்கு சிவில் சமூகங்கள் தலையிட்டது குறைவு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி உடைந்து வெளியே வந்த பொழுது, சில தனிநபர்கள்தான் தலையிட்டார்கள்.எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் உடைவு வந்திருக்கிறது.அதைத் தீர்ப்பதற்குச் சிவில் சமூகங்கள் தலையிடாத ஒரு நிலை காணப்படுகிறது.

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூத்த கட்சிகளில் ஒன்றாகவும் உள்ளவற்றில் பெரியதாகவும் காணப்படும் ஒரு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூப்பாக உள்ளவர்களாலும் முடியவில்லை;கட்சிக்கு வெளியேயும் யாரும் இல்லையா?இது தமிழரசுக் கட்சியின் சீரழிவை மட்டும் காட்டவில்லை. தமிழ் அரசியலின் சீரழிவையும் காட்டுகின்றது. ஒரு பொதுவான,பலமான மக்கள் இயக்கம்;ஒரு தேசிய இயக்கம் இல்லாத பாரதூரமான வெற்றிடத்தை அது காட்டுகின்றது.

அரங்கில் உள்ள புத்திஜீவிகள்,கருத்துருவாக்கிகள்,குடிமக்கள் சமூகங்கள், மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் போன்ற யாருமே இந்த விடயத்தில் தலையிடாத ஒரு நிலை.பெரும்பாலானவர்கள் இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்று கருதிக்கொண்டு பார்வையாளர்களாகக் காணப்படுகிறார்கள்.சிலர் அரசியற் கூர்ப்பின் வழியில்,சிதைய வேண்டியது சிதையட்டும் என்று கூறுகிறார்கள்.இது தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாகப் பலமாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை மட்டுமல்ல, தமிழ் அரசியல் சமூகம் முழுவதற்கும் வந்த ஒரு சோதனை.

அவ்வாறு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான,மூப்பான ஆட்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால்,கட்சியின் எதிர்காலத்தை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். நீதிமன்றத்தில் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கான தீர்ப்புக்களின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும்.

தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை,போர்க் குற்றம்,மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும், உள்ளதில் பெரிய ஒரு கட்சி தனக்குள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.எந்த உள்நாட்டு நீதியை ஏற்றுக்கொள்ள மறுத்து பன்னாட்டு நீதியைக் கேட்கின்றதோ,அதே உள்நாட்டு நீதியின் முன் போய் நிற்கின்றது.இது,தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றதா?அல்லது அப்புக்காத்துமாரின் அரசியல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றதா?

-நிலாந்தன்

Posted in Uncategorized

தமிழர்களது இனப்பிரச்சினையில் ஜே.வி.பி.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.

ஆனால், இன்றைய காலங்களில் தமிழர்களது விடயங்களில் அக்கறையானவர்களாக தம்மைக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த ஜே.வி.பியின் தாபகத் தலைவர் ரோஹ விஜயவீர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் இலங்கையின் ஆட்சியை ஆயுத முனையில் பிடிக்க இரண்டு முறை முயற்சித்தார்.

1971இல் அவரது இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியானது. மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக 1987-1989 காலப் பகுதியிலும் முயற்சி பயனற்றுப் போனது உலப்பன தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்திருந்த விஜயவீராவை, இராணுவம் 1989 ஒக்ரோபர் 3ஆம் திகதி கைது செய்தது. நவம்பருடன் அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்டளவான ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெறும் கட்சியாக அது வளர்ந்தது. ஆனால், கடந்த சில தேர்தல்களிலும் தேசிய அரசியலிலும் சரி, தமிழர்களது விடயங்களிலும் சரி கணக்கிலெடுக்கப்படாத நிலையை எட்டியிருந்த ஜே.வி.பி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவை விரட்டியடித்த அரகலயவுடன் சற்று மேம்படுத்திக் கொண்டதுடன், இப்போது இந்தியா அழைத்துப் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான்.

அதே நேரத்தில் மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக் கொண்டது என்ற ஒரு மாயையும் தன்வசப்படத்திக் கொண்டுள்ளது என்பது உண்மை. அரசியலிலும் பன்னாட்டு உறவுகளிலும் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்பது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிரூபிக்கப்படலாம். அதற்கு ஜே.வி.பியும் விலக்களிப்புக்கு உட்பட்டதல்ல.

ஜே.வி.பி யின் இந்திய விஜயம் அந்நாட்டின் இராட்சிய நலன்கள் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல இலங்கைத் தமிழர்களது விவகாரத்திலும் முக்கியமானது. ஆனாலும், இந்தியா மேற்கொண்ட ஜே.வி.பி தொடர்பான இராஜதந்திர நகர்வு அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள் தள்ளியதுடன், உலகில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என்ற கோட்பாட்டை இந்தியா கடைப்பிடிப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா எந்த அளவுக்கு அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கிறது என்பதற்கு நல்லதோர் உதாரணமாக இருக்கும் ஜே.வி.பி யினருக்கான அழைப்பு நல்லதொரு சமிக்ஞையாக இருந்தாலும், வேறு ஒரு நாடி பிடிப்பாகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில் இலங்கை அரசியலில் முழுமையான ஈடுபாட்டுடன்தான் இருக்கிறோம் என்பதனை வெளிப்படையான அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம். ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி ரோஹண விஜயவீரவால் 1960களில் ஆரம்பிக்கப்பட்டவேளை, அவருடைய கடும்போக்கு அரசியலுடன் இந்தியா தொடர்பிலும் விரோதப் போக்கையே கடைப்பிடித்துவந்திருந்தார்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கமாக இலங்கை நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு அமைந்திருந்தது. அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்த கடும்போக்கு இந்திய விஜயத்துடன் சற்றுத் தளர்ந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

எதிர் நிலைப்பாட்டு அரசியலையே மேற்கொண்டுவருகின்ற ஜே.வி.பியானது கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தாலும் ஆட்சி அதிகாரம் என்று வருகின்றவேளை, கடும்போக்கைத் தணித்து இராஜதந்திர ரீதியில், ஓரளவுக்கேனும் மென்போக்கு தேவையானதாக இருக்கிறது என்பதனையே இந்தியாவின் அழைப்பையேற்று சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றமை காட்டிநிற்கிறது.

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவமுடையதான இலங்கை, இந்தியாவுக்கு அதன் தேசியப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு என பல்வேறு விடயங்களிலும் தேவையானதொன்று. எனவே இங்கு ஏற்படவிருக்கின்ற அல்லது ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அரசியல் மாற்றம் பார்வைக்கு உட்படுவதில் தவறொன்றுமில்லை.

அந்தவகையில்தான் ஜே.வி.பியினருக்கான இந்திய அழைப்பும் அமைந்திருக்கிறது. இவ்வருடத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தியா, மேற்குலக சக்திகளாலும் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கமுடியாதது.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, வாக்களித்த சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டமையில் ஜே.வி.பியினரின் பங்கு முக்கியமாக இருந்தது. அதன் பின்னர் உருவாகியிருக்கின்ற அரசியல் மாற்றம் அவர்களது பக்கம் பெரும் மக்கள் அலையொன்றை உருவாக்கியிருக்கிறது.

மூன்று ஆசனங்களையே பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற அக் கட்சிக்கு இது சாதகமானதே. அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகளின்படி தற்போதைய ஜனாதிபதிக்கும் ஜே.வியினருக்கும் இருக்கின்ற ஆதரவானது சம அளவுகளிலேயே காணப்படுகின்றமை தெரியவருகிறது.

அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு அளவினை விடவும் ஜே.வி.பிக்கு அதிகம் என்பதே இதிலுள்ள பிரதான விடயமாகும். இந்திய ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா ஜே.வி.பியை இந்தியா அழைத்தமைக்கு ஓர் உந்துதலாகும்.

இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கட்சியை இந்தியா தங்களுடைய அனுசரிப்புக்குள் இழுத்தக் கொள்வதற்காகவே இந்த அணுகல். இது தவிர வேறொன்றில்லை.

இன்னொருபுறம், 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்திவந்திருந்தது. இந்த அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் 1986இல் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர, அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என்றார். அதுவே இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாகத் திகழ்கிறது. இதில் ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

அதனோர் அங்கமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வட, கிழக்கினை அவர்கள் பிரித்து வேறாக்கியமையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதில் முழு எதிர்ப்பாக இருந்து வருகின்ற இக்கட்சியை எவ்வாறு இந்தியா தம்முடைய பார்வைக்குள் அல்லது கட்டுக்குள்கொண்டுவர முயல்கிறதா என்பது கேள்வி.

அப்படியானால், நாங்கள் ஒப்பந்தத்தைச் செய்தோம். அது உங்களது நாட்டின் அரசியலமைப்பில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், இந்தியா தன்னுடைய நலன்களை அலசாமல் இந்த நகர்வை எடுத்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நகர்வு ஒருவேளை, ரணிலுக்கு தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டால், தற்போதிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விடவும் அதிகப்படியான வாக்குகளைப் பெறப்போகின்ற ஒருவர் அனுரகுமார திசாநாயக்கவாக இருப்பார்.

அவ்வேளையில், ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தினைத் தவிர்த்துக்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இந்த நகர்வினை எடுத்திருக்கிறது என்றும் கொள்ளமுடியும். எது எவ்வாறானாலும், தற்போதைய ஜனாதிபதியான ரணில்தான் இந்தச் சந்திப்புக்கான வேலைகளைச் செய்து கொடுத்தார். ஜே.வி.பி. க்கு இந்தியா தம்முடைய ஆதரவினை வழங்குவதற்கு முன்வருகிறது.

தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜே.வி.பி. யின் ஒத்துழைப்பு முயற்சிக்கப்படுகிறது. என்றெல்லாம் பேசப்படுகின்ற பல்வேறு விடயங்கள் இதற்குள் இருக்கத்தான் செய்கிறது. ரணில் இதனை ஏற்பாடு செய்கிறார் என்றால், ஜே.வி.பி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அரசியலாக இருக்கும்.

இல்லாவிட்டாலும், ரணிலுக்கு ஜே.வி. பியின் ஆதரவு கிடைப்பதற்கு ஏதுநிலைகள் ஏற்படுத்தப்பட முயற்சிக்கப்படலாம். ஆனாலும், இது இந்தியாவின் தனிப்பட்ட முயற்சியாக இருக்க வாய்ப்புமில்லை. எப்படியிருந்தாலும், ஜே.வி.பி. யினை இந்தியா, அவசர அவசரமாக உள்வாங்க முற்படுவதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம்.

அரசியலில், இராஜதந்திரம் சகஜம்தானே.! என்றவகையில் தமிழர்களுடய விவகாரத்திலும் தேசிய அரசியலிலும் ஒரு நெகிழ்வுப் போக்கை, அனுசரிப்பு நிலைப்பாட்டை கைக்கொள்ள விளையும் ஜே.வி.பி. எதிர்வரும் காலங்களில் தமிழர்களது அரசியல், இனப்பிரச்சினை தொடர்பில் நல்லெண்ணத்தைக் கைக்கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோம்.

– லக்ஸ்மன்

சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.

கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.

மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு, அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகப் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து தகுதிகளையும் கொண்டவன் என்ற தலைக் கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வி மற்றும் கடந்த ஜனவரி 27ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின்போது, தலைவர் பதவி நனவாகாத நிலையில், பொதுச் செயலாளர் பதவியையாவது அடைந்து விட வேண்டுமெனத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் மீண்டும் ஆசைப்பட்டு அதுவும் கிடைக்காத நிலையில், தனது விசுவாசியான திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டுமென மேற்கொண்ட சதிகள், குழிபறிப்புக்கள் கட்சியைப் பிளவு படுத்தும் காய் நகர்த்தல்கள் மத்தியில் குகதாசன் தெரிவு செய்யப்பட்டபபோதும், அதற்குக் கிளம்பிய கடும் எதிர்ப்புக்களினால் இன்று வரை அவர் அந்த பதவியை ஏற்க முடியாத நிலை ஆகிய இரு காரணங்களின் பின்னணியிலேயே தற்போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது ஒன்றும் ரகசியமானதல்ல.

‘தோற்றுப்போன’ தரப்பின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள் ‘வீட்டு’தரப்புக்களினால் கூறப்படும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தவர்கள், ‘இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனவரி 27இல் தெரிவான குகதாசனையே நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.

ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.

இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் ​பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.

வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம். வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றைக் கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்த வரலாற்றுத் தவறான முடிவினால் அவர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் பற்ற வைத்த தீ இன்று தான் பற்றி எரிய அண்மையில் இரா.சம்பந்தன் எம். பி. பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரியது. தற்போது சம்பந்தன் விதைத்த வினையின் விளைவாக அவரின் கட்சியையே அறுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.

பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும்.

-முருகாநந்தன் தவம்

Posted in Uncategorized

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? – நிலாந்தன்

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது.தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது.அவ்வாறு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது.1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா,பாலகிருஷ்ணன்,சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில் பேசினார்கள்.அவர்களுடைய கருத்தை,அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்,எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள்.எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்?2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில்,நான் ஆற்றிய உரையில்,சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன்.அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார்.2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர்,ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார்.அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள்.சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல.அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல.இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர்.அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன்.சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான்.அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார்.அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார்.பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்….”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் .பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?”என்று.

சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

எனவே,சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை.அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும்.இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும்.தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள்.தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு.போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது.ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல.தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர்.ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்ச ஆரம்பித்துவிட்டன – அ.நிக்ஸன்

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வட அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தக்குத் தடை விதிக்கப்பட்டு, அத் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிலோ கனடாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்த ஒருவர் அதைக் கூறி அரசியல் தஞ்சம் கோரினால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது.

அவ்வாறான ஒருவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபின் அல்லது விலக்கப்பட்டபின் கூட அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினால் அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுக்கு மட்டுமே கனடாவில் அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் புகலிட அந்தஸ்து வழங்கப்படுவது வழமை.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்து ஆனால், கருத்துநிலையை மாற்றாமல் இருக்கும் பலருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது வழமையாகும்.

பிரித்தானிய அரசு புலிகளுக்குத் தடை விதித்திருந்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அங்கு தொடர்ந்தும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், கனடாவில் அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையும் இல்லை.

இதனால், புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களிடையே கனடாவின் தடை அரசியல் பற்றிய கடுமையான விமர்சனம் இருந்துவருகிறது.

2006ஆம் ஆண்டு கொன்ஸர்வேடிவ் கட்சியின் ஸ்-ரீபன் ஹார்ப்பர் பிரதமராகி இரண்டு மாதங்களுக்குள், அதுவும் பேச்சுவார்த்தைக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனேடிய அரசு முதன்முதலாக அமுல்படுத்தியது.

கனடாவில் தடை விதிக்கப்படுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்து இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தது என்பது இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாக்குகளைப் பெற விழையும் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் கடுமையான அதிருப்தி குறித்து கனேடிய பிரதான கட்சிகள் அறிந்திருப்பதால், இலங்கை அரசு மீதும் தாம் அழுத்தம் தருவதாக, அல்லது தர இருப்பதாக பாவனை செய்வதும் சில அழுத்தங்களை மேற்கொள்வதும் வழமை.

எந்த ஹார்ப்பர் அரசாங்கம் 2009ஆம் ஆண்டுக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததோ அதே ஹார்ப்பர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளாது புறக்கணித்து தமிழ் மக்களிடையே நற்பெயரையும் அதேவேளை, இலங்கையில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் அரசியலுக்கும் ஊக்கம் கொடுத்தார்.

கனடாவில் தற்போது லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கிறது. அதன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து வருகிறார். இந்தத் தடையை நீடிக்கும் அதேவேளை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு நீதி கோருவது போன்ற பாவனையையும் ஆங்காங்கே வெளிப்படுத்திவருகிறார்.

இவ்வாறு, கனடாவில் புலம்பெயர் ஈழத்தமிழர் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன அழிப்புக்கு நீதி கேட்பது போன்ற தேர்தல் அரசியற் பாவலாவைக் காட்டிவருகின்றன. இதனை ஈழத்தமிழர்களும் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள ஓரளவுக்காவது ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்துள்ளது என்றும் அதற்குச் சர்வதேச நீதி வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் தரப்புகளுக்கு ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானம்கனேடிய பாராளுமன்றில் அனைத்துக்கட்சி ஆதரவுடனான தீர்மானமாக வெளிப்பட்டது மட்டுமல்ல, 2022ஆம் ஆண்டிலிருந்து மே 18 தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ள சூழலும் தோன்றியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது தடை விடயத்தில் கடுமையாக இயங்கிய கனடா ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற அனுமதித்தது எதற்காக, இன அழிப்பு நினைவேந்தலை அங்கீகரித்தது எதற்காக என்று அங்கு மிகச் சிறிய அளவிலேனும் குடியேறி வாழும் சிங்களத் தரப்பினர் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேவேளை, சட்ட நடவடிக்கைகளைச் சவாலாக முன்னெடுத்தும் வந்துள்ளனர்.

கனடாவின் பிரபலமான நகரமாகவும் பெருமளவு ஈழத்தமிழர் வாழுகின்ற பகுதியாகவும் ரொறன்ரோ விளங்கும் போதும், அந்த நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கை அரசின் தூதராலயமும் குறைந்தளவில் என்றாலும் தாக்கம் செலுத்தக்கூடிய அளவில் சிங்கள சமூகமும் காணப்படுகின்றன.

இந்தச் சிங்கள அமைப்புகள் இன அழிப்பு என்ற கருத்தியலுக்கு கனேடிய அரச அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கின்றன. கனடாவைத் தொடர்ந்தும் இலங்கையின் பக்கம் வைத்திருக்கும் செயற்பாடுகளை அவை தீவிரப்படுத்தியுள்ளன.

அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட புலம்பெயர் தனிநபர் க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனேடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்குக் கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை.

கீழே தரப்படும் சிங்கள அமைப்பின் காணொளி அதற்குச் சாட்சியாகிறது. அதேபோல இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்ட இன அழிப்பு செய்தி தொடர்பான கருத்தும் இலங்கை அரசின் இது தொடர்பான பயத்தையும் வெளிப்படுத்துகிறது.

கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், அல்லது அதற்கு முன்னர் திடுமென அவ்வாறு நடைபெறும் சூழல் எப்போது தோன்றினாலும், அதை எதிர்கொள்வதில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும் கென்சர்வேற்றிக் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளருமான பியர் பொலியெர்வ் கூட தற்போது ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குக் கனடா நீதி கோரும்
எனக் கூற ஆரம்பித்துள்ளார்.

இது மேலோட்டமாக வாக்கு அரசியலாகத் தெரிந்தாலும் இலங்கை தொடர்பான கனடா அரசின் வெளியுறவுக் கொள்ளையில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருதல் என்ற கோரிக்கையின் வகிபாகம் வலுப்பட ஆரம்பித்துள்ளதை நாம் இங்கு கூர்மையாக நோக்கவேண்டும்.

இதை மேலும் செம்மைப்படுத்தும் கடமை அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளுக்கு உண்டு என்ற கருத்தைக் கனடா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தேர்தல் அரசியலுக்காக இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான கருத்தியலை ஆதரிக்க ஆரம்பித்திருந்தாலும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இன அழிப்புக்கான நீதி தாக்கம் செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கனேடிய அரசின் ஐ.நா. மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் ஒரு காலத்தில் சிங்களத் தரப்போடும் தமிழ்த் தரப்போடும் சமஷ்டி தீர்வுகுறித்து கருத்துத் தாக்கத்தை ஏற்பட்ட முனைந்தவருமான பொப் ரே கனடிய அரசு ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற கருத்தியலைத் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று 2023 ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தை பிறக்கும் வழி பிறக்குமா ? – நிலாந்தன்

அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது.அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது,அவர்கள் சொன்னார்களாம்,காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது.ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று.இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை.ஆண்டு இறுதியில் இதுதான் நிலைமை என்றால் தை பிறந்தாலும் வழி பிறக்குமா?

சாதாரண மக்களுக்கு வழி பிறக்குமோ இல்லையோ,அரசியல்வாதிகள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கான புதிய வழிகளைத் தேடித் திறக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காகப் புதிய கூட்டணி ஒன்றை நோக்கி ஒரு புதிய அலுவலகம் கடந்த முதலாம் தேதி ராஜகிரியவில் திறந்து வைக்கப்பட்டது.அதே நாளில், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஷான் விஜயலால் டி சில்வா எதிரணியோடு அதாவது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். இவர் தென்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர். அவர் எதிரணியில் இணைந்து கொண்டதன் மூலம் எதிரணி தானும் பலமடைவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.

அதாவது ,புதிய ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளோடு பிறந்திருக்கிறது என்று பொருள்.மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கலாம்.மரக்கறிகளின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து போகலாம்.வரியானது மக்களை ஈவிரக்கமின்றிக் கசக்கிப்பிழியலாம். மோட்டார் சைக்கிள் ஒரு லக்சறிப் பொருளாக மாறலாம்.ஆனால் அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி குறையப் போவதில்லை என்பதைத்தான் ஆண்டின் தொடக்கம் நமக்கு உணர்த்துகின்றது.

இவ்வாறு தென்னிலங்கையில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கி பிரதான கட்சிகள் ஏற்கனவே உழைக்க தொடங்கி விட்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்த்தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முதலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குத்துவிளக்கு கூட்டணிதான்.சில மாதங்களுக்கு முன் கூட்டணியின் கூட்டம் மன்னாரில் நடந்த பொழுது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்று அக்கூட்டு முடிவெடுத்தது.அந்த முடிவை வலியுறுத்தி கூட்டுக்குள் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.சுரேஷ் அவ்வாறு கருத்து தெரிவித்த பின் அண்மையில் விக்னேஸ்வரன் அதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.ஒரு தமிழ் பொது வேட்பாளராகத் தான் களமிறங்கத் தயார் என்றும் அவர் அறிவித்துவிட்டார்.

இவ்வாறு விக்னேஸ்வரன் அறிவித்த பின் கஜேந்திரக்குமார் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்கும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும்.

அதே சமயம் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.அது தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மினக்கெடுகின்றது.எனினும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கும் பகிஷ்கரிப்புக்கும் எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.தமிழரசுக் கட்சி யாராவது ஒரு சிங்கள வேட்ப்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைத் திருப்பும் நோக்கத்தோடிருந்தால்,அக்கட்சி பொது வேட்பாளரை எதிர்க்கும்.

கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தலின் போதும் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைத்தது,தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுதான்.கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட அக்குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனினும்,அக்குழு அந்த முடிவை நோக்கி கருத்துருவாக்க வேலைகளைச் செய்தது.

இம்முறை குத்துவிளக்குக் கூட்டணி அந்த முடிவை எடுத்திருக்கின்றது. குத்துவிளக்கு கூட்டணி இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு கூட்டணியாகப் பார்க்கப்படுகின்றது.இந்தியாவுக்கு ஆதரவான ஒரு கூட்டு என்று கருதப்படும் குத்துவிளக்கு கூட்டணி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்தை கையில் எடுத்ததனால் அது இந்தியாவின் வேலையோ என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டிருக்கலாம்.

முதலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று பார்ப்போம்.ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக வெல்லப் போவதில்லை.ஆனால் அவர் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உட்படுத்துவார்.எப்படியென்றால்,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழ் கட்சிகள் கடுமையாக உழைத்தால்,தமிழ் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்குத்தான் விடும்.அப்படி விழுந்தால்,பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கு மேலான வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும்.இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட சிங்கள வேட்ப்பாளர்கள் அரங்கில் காணப்படுகின்றார்கள்.அதாவது சிங்கள வாக்குகளே சிதறும் ஒரு நிலமை.இதில் தமிழ் வாக்குகளின் கிடைக்கா விட்டால்,எவருக்குமே முதற் சுற்று வாகுக்கு கணக்கெடுப்பில் வெற்றி கிடைக்காமல் போகலாம்.அப்பொழுது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்புக்கு போக வேண்டிவரும். அதில் தமிழ் மக்கள் யாருக்கு தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.அதாவது யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதனை தமிழர்கள் தீர்மானிக்கக்கூடிய பேர வாய்ப்பைப் பரிசோதிக்கும் ஒரு முயற்சியே அது.

பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்காது என்றால், அவர்கள் தமிழ்த் தரப்போடு பேரம்பேச வருவார்கள்.அப்பொழுது தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமிழ்மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்கலாம்.அதாவது தமிழ் வாக்குகளை ஒரு சிங்கள வேட்பாளருக்கு “பிளாங்க் செக்”காக வழங்குவதற்கு பதிலாக பேர வாய்ப்பாக அதைப் பயன்படுத்துவது.

ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களோடு வெளிப்படையான ஓர் உடன்பாட்டுக்கு வரும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படும் ஆபத்து அதிகமுண்டு என்பதுதான்.அதனால் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தமிழ் மக்களோடு பேரம்பேசத் தயங்குவார்.ஆனால் அதுகூட தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு ஒரு உண்மையைச் சொல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்கும்.அது என்னவெனில், சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருமே இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்பதுதான்.

எனவே ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு உள்ள பேர வாய்ப்புகளை பரிசோதிக்கலாமோ இல்லையோ,தமிழ் மக்களின் மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கு உதவுவார்.அவர் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் வாக்குகளைக் கேட்பார். தேர்தல் என்று வந்தால் அது ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம். அங்கே கட்சிகளுக்கு புது ரத்தம் பாச்சப்படும். கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இறங்கி வேலை செய்வார்கள். கிராமங்கள்தோறும் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படும். கிராம மட்டத்தில் கட்சி வலையமைப்புகள் பலப்படுத்தப்படும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி எல்லா கட்சிகளும் அவ்வாறு உழைக்கும் பொழுது, அது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டும்.

ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தலில் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராகத் திரளாக வாக்களித்து இருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக விழும் வாக்குகளை தமிழ் மக்கள் ஆணைக்கான வாக்குகளாக மாற்றினால் என்ன?

கஜேந்திரகுமார் கூறுகிறார்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் இறுதியாக யாராவது ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பார் என்பதனால் அந்தத் தெரிவை தாம் ஏற்கவில்லை என்று. மேலும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் அவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் இங்கு ஏற்கனவே பார்த்ததுபோல,பிரதான சிங்கள வேட்பாளரோடு பேரம் பேசக்கூடிய நிலைமைகள் குறைவாக இருக்குமென்றால்,அதை தமிழ் மக்களின் ஆகப்பிந்திய ஆணையைப் பெறுவதற்கான ஒரு மறைமுக வாக்கெடுப்பாக தமிழ்மக்கள் பயன்படுத்தலாம்.தமது உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறலாம்.

இந்த கோரிக்கையை முன்வைப்பது சுரேஷ் பிரேமச்சந்திரன் அல்லது குத்து விளக்கு கூட்டணி அல்லது விக்னேஸ்வரன் என்பதற்காக அதனை எதிர்க்கத் தேவையில்லை.அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையிலாது அதைப் பரிசோதிக்கலாம்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் ரணில்,சஜித் உட்பட எல்லா சிங்கள வேட்பாளர்களையும் சவால்களுக்கு உட்படுத்துவார்.அவர்களை தமிழர்களை நோக்கி வரச்செய்வார்.அல்லது அவர்கள் தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்துவார்.அதாவது சிங்கள வேட்பாளர்களை அம்பலப்படுத்துவார். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,அவர் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையை வெளிக்கொண்டு வருவார்.தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார்.அந்த ஐக்கியத்துக்கு தகுதியானவர்கள் தலைமை தாங்கலாம்.

ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் கட்டாயமாக விக்னேஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.கிழக்கிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யதால் அது மிகச்சிறப்பு.ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் சிறப்பு.அவர் ஒரு குறியீடு.கட்சிகளாக,வடக்குக் கிழக்காக,சமயங்களாக,சாதிகளாக,ஒரே கட்சிக்குள் இருவேறு குழுக்களாக,முகநூல் குழுக்களாக,சிதறிக்கிடக்கும் ஒரு சமூகத்தை,ஒரு தேர்தலை நோக்கியாவது ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அவருக்கு வாய்ப்பளித்தால் என்ன ?

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்

ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு இருந்தது. கட்டுப்பாட்டு நிலம் இருந்தது. எனவே மாவீரர் நாள் ஓர் அரச நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாவீரர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச அனுசரணையும் அரச வசதிகளும் கிடைத்தன. துயிலுமில்லங்களை அக்கருநிலை அரசு புனிதமாக, ஒரு மரபாகப் பராமரித்தது.

ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த 15 ஆண்டுகளாக நினைவு கூர்தலே ஒரு போராட்டமாக மாறியிருக்கிறது.

நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது. அதைத் திருத்தி ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் எத்தனிக்கின்றது. இப்படிப்பட்டதோர் சட்டச் சூழலில், சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூர்வது சட்டப்படி குற்றமாகும்.

அந்த அடிப்படையில்தான் போலீசார் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களை நாடி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்கள் அவ்வாறு தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது இல்லை. சிலசமயம் நிபந்தனைகளோடும் சில சமயம் நிபந்தனைகள் இன்றியும் நினைவு கூர அனுமதிக்கப்படுகின்றது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். மாவீரர் நாள் ஒப்பீட்டளவில் பரந்த அளவிலும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்படும். இம்முறையும் அப்படித்தான். வடக்கில் பெரும்பாலான நீதிமன்றங்களில் நினைவு கூர்தலுக்குச் சாதகமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. கிழக்கில், மட்டக்களப்பிலும் அப்படித்தான்.

அதாவது கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நினைவு நாளுக்குமாக தமிழ் மக்கள் வழக்காட வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. ஒரு சட்டப் போராட்டம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில், அது ஓர் அரசியல் போராட்டம். அது ஒரு அரசியல் விவகாரம். அதனை அரசியல்வாதிகள் அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படி ரிஸ்க் எடுத்துப் போராடவும்,சிறைகளை நிரப்புவதற்காகப் போராடவும் தயாராகக் காணப்படுகின்றார்கள்?
சட்டதரணிகள் அதிகம் செலுத்தும் தமிழ்த் தேசிய அரசியலில், அது பெருமளவுக்கு ஒரு சட்டப் போராட்டமாகத்தான் காணப்படுகின்றது. அதை ஓர் அரசியல் போராட்டமாக ; நினைவு கூர்வதற்கான கூட்டுரிமைக்கான, பண்பாட்டு உரிமைக்கான,ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகளால் முடியவில்லை. நினைவு கூரும் உரிமைக்காக மட்டுமல்ல ஏனைய எல்லா விடயங்களுக்காகவும் பொருத்தமான விதங்களில் தொடர்ச்சியாகவும் பெருந்திரளாக மக்களைத் திரட்டியும் போராட முடியாத தமிழ் கட்சிகள், நினைவு கூர்தலை ஒரு போராட்டமாக மாற்றி விட்டன.

2009க்கு பின்னரான நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் நினைவு கூர்தல் ஒரு பிரிக்கப்படவியலாத பகுதி என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இறந்த காலத்தைத் தத்தெடுக்கும் அரசியல்வாதிகள், ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தையும் தியாகத்தையும் பின் தொடரத் தயார் இல்லை.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பொறுப்பு அதிகம். அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசு போல காட்டிக் கொள்கிறது. விட்டுக்கொடுப்பற்ற சமரசத்துக்கு இடமற்ற ஒரு தரப்பாகவும் தன்னை காட்டிக் கொள்கின்றது. அப்படியென்றால், ஆயுதப் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரத்தையும் தியாகத்தையும் அக்கட்சியானது அறவழிப் போராட்டத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

தையிட்டி விகாரைக்கு முன்பு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அக்கட்சி போராடி வருகிறது. திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சி வடக்கு கிழக்காக வாகன ஊர்தியைக் கொண்டு போன போது திருகோணமலையில் திட்டமிட்டு இறக்கப்பட்ட சிங்கள மக்கள் அந்த ஊர்தியைத் தாக்கினார்கள். இது விடயத்தில் ஏனைய கட்சிகளை விடவும் முன்னணி ஒப்பீட்டளவில் ரிஸ்க் எடுக்கிறது என்பது உண்மை. ஆனால் அது போதாது. ஏனைய கட்சிகளை போராட்டத்துக்கு விசுவாசம் அற்றவை என்றும், உண்மையாகப் போராடாதவை என்றும், வெளிநாடுகளின் கைக்கூலிகள் என்றும், அதனால் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தகுதியற்றவை என்றும் விமர்சித்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தனக்கு அந்தத் தகுதி அதிகம் என்பதனை போராட்டக் களத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர நினைவு கூர்தல் களத்தில் அல்ல.

அதாவது ஆயுதப் போராட்டத்தின் நேரடி வாரிசுகளாக தங்களைக் கருதும் எந்த அரசியல்வாதியும் அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தினதும் தியாகத்தினதும் தொடர்ச்சியாகவும் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்.ஆனால் அவ்வாறான வீரத்தையோ தியாகத்தையோ கடந்த 15 ஆண்டுகளிலும் எந்த அரசியல்வாதியிடமும் காண முடியவில்லை.

அதற்காக அவர்களை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லியோ இரத்தம் சிந்திப் போராடச் சொல்லியோ இக்கட்டுரை கேட்கவில்லை. மாறாக இப்போது இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலில் எங்கே அதியுச்ச தியாகமும் வீரமும் தேவைப்படுகின்றனவென்றால் அது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதில் தான். தமிழ் மக்களை ஒரு பெரிய மக்கள் கூட்டமாகக் கட்டியெழுப்புவதில்தான். அதற்குத்தான் அதிக புத்திசாலித்தனமும் தீர்க்கதரிசனமும் தேவைப்படுகின்றன. அதுதான் இறந்தவர்களின் ஆன்மாவைக் குளிரச் செய்யும். அதுதான் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வணக்கம். கடந்த 14 ஆண்டுகளாக தங்களுக்குள் தாங்களே உடைந்துடைந்து போகும் தமிழ்க்கட்சிகள் இறந்தவர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதுவாகத்தான் இருக்கும்.

2009க்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டுவதில்தான் தங்கியிருக்கின்றது. தேசியவாத அரசியல் எனப்படுவது மிகப்பெரிய திரளாக மக்களைக் கூட்டிக் கட்டுவதுதான்.ஆனால் எந்த ஒரு கட்சியாலும் அவ்வாறு மக்களை பெருந்திரளாகக் கூட்டிக்கட்ட முடியவில்லை என்பதைத்தான் கடந்த 15 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.

2009இல் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து முதலில் 2010ல் கஜேந்திரகுமார் வெளியேறினார். அவருக்கு பின் 2015ல் தமிழரசு கட்சிக்குள் இருந்து பேராசிரியர் சிற்றம்பலம்,சிவகரன்,அனந்தி,அருந்தவபாலன்,உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியேறியது. அதன் பின் இடையிலே வந்த விக்னேஸ்வரன் இடையிலேயே வெளியேறினார். அதன்பின் தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக நின்ற கட்சிகள் உடைந்து சிதறின. அதன் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டு மணிவண்ணன் வெளியேறினார். அதன் பின் கூட்டமைப்பில் இருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறின. அதன்பின் பங்காளி கட்சிகளும் விக்னேஸ்வரனும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கவிருத்த பின்னணியில், விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் சேர்ந்து அக்கூட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

இப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி எழுந்திருக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பதைத் தெரிவதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் . இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் முகநூலில் ஒரு புதிய மோது களத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இரண்டு தலைவர்களுடைய விசுவாசிகள் மிகக் கேவலமாக ஒருவர் மற்றவரை வசை பாடுகிறார்கள். ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கப் பார்க்கின்றார்கள். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே கட்சிக்குள் ஒன்றாக இருந்தவர்கள்.

இதுதான் மணிவண்ணன் கட்சிக்குள் இருந்து பிரிந்த போதும் நடந்தது. அங்கேயும் முன்னாள் தோழர்கள் பின்னாள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். கட்சி ரகசியங்கள் வெளியரங்கிற்கு வந்து நாறின. முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை போலவே இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான மோதலானது முகநூலில் மற்றொரு அசிங்கமான மோதல் களத்தைத் திறந்து விட்டிருக்கிறது.

இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில், சிதறிக்கொண்டு போகும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இறந்தவர்களுக்கும் தியாகிகளுக்கும் செய்யும் ஆகக்கூடிய மரியாதை எதுவென்று சொன்னால் ஒரு தேசமாக திரண்டு காட்டுவதுதான். செய்வார்களா?

தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? – நிலாந்தன்

அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்.அவை சிலசமயங்களில் துணிச்சலான,பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன.

இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட  கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு கடிதங்களை எழுதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மனோ கணேசன் தனது கட்சி அவ்வாறு கடிதம் எழுதப்போவதில்லை என்று கூறுகிறார். இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை என்று மனோ கணேசன் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியாவுக்கு செல்கிறார்.அங்கே அவர் இந்திய பிரதமரை சந்திப்பதற்கிடையில் தமிழ்க் கட்சிகளின் மூன்று கடிதங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்படுகின்றன. முதலாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது.அக்கடிதம் எற்கனவே ஊடங்களுக்குத் தரப்பட்டுவிட்டது. இரண்டாவது சம்பந்தருடையது. மூன்றாவது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரனின் கட்சிகளுடையது.

இக்கடிதங்களின் உள்ளடக்கம் என்னவென்பது ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்துவிட்டது.அந்த உள்ளடக்கங்களை தொகுத்து பார்த்தால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது.

இரண்டாவது கடிதம் தமிழரசுக் கட்சியுடையது. இந்தியாவுக்கு ஆறு கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கடிதம் எழுதியபொழுது அதில் தமிழரசு கட்சியும் கையொப்பமிட்டது.கடிதத்தின் உள்ளடக்கத்தை மாற்றுவதில் தமிழரசுக் கட்சி முக்கிய பங்காற்றியது.அக்கடிதம் 13க்குள் முடங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அதற்குப்பால் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழரசு கட்சி ஏற்படுத்தியது.ஆனால் இப்பொழுது தமிழரசு கட்சி தனியாக ஒரு கடிதம் எழுதுகிறது.அக்கடிதமானது 13 வது திருத்தத்தை கடந்து சென்று ஒரு சமஸ்டி கோரிக்கையை-கூட்டாட்சிக்  கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது.இதுவிடயத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வரைந்த கடிதத்தை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.அக்கடிதத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே,தமிழரசுக்கட்சி தனியாக ஒரு கடிதத்தை எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது. அப்படி ஒரு கடிதத்தை எழுதப்போவதாக முதலில் சொன்னது அக்கட்சிதான்.தமது கடிதத்தை முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதும் அக்கட்சிதான்.அக்கட்சி இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மிகத்தெளிவாக 13வது திருத்தத்தை நிராகரிக்கின்றது.அதேபோல மிகத்தெளிவாக கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைக்கின்றது,மேலும் கடிதத்தின் இறுதி வரியில் “இந்தியாவின் சட்டபூர்வமான  பிராந்திய பாதுகாப்பு நலன்களை”அக்கட்சி ஏற்றுக் கொள்வதை கடிதம் மீள வலியுறுத்துகின்றது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு  நலன்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அந்த அடிப்படையில் இந்திய இலங்கை உடன்படிக்கையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அக்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.அதேசமயம் அந்த உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சி இந்தியாவைப் பகை  நாடாகப் பார்க்கமுடியாது.ஆனால் நடைமுறையில் முன்னணியானது, தனது அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அல்லது தன்னை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்களைத் தூற்றும்போது அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,கைக்கூலிகள்,துரோகிகள் என்றெல்லாம்  குற்றஞ்சாட்டுவதுண்டு.

தமது கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்திடம் கையளித்தபின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஊடகங்களுக்குத்  தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படுகின்றது. நடைமுறையில் இந்தியாவை ஒரு பகை நாடாகக் காட்டிக்கொண்டு, உத்தியோகபூர்வமாக இந்தியாவின் பாதுகாப்புசார் நலன்களைத்  தாம் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சி கூறுவதை, அகமுரண்பாடு என்று விளங்கிக் கொள்வதா? அல்லது உள்ளூரில் கட்சி மோதல்களில் வெளியுறவு நிலைப்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி அந்தக்  கட்சியிடம் இல்லை என்று எடுத்துக் கொள்வதா?

இந்தியா ஒரு எதிரி நாடா அல்லது கையாளப்பட வேண்டிய ஒரு பிராந்தியப்  பேரரசா என்ற தெளிவு ஈழத்தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.பகைநாடு என்றால்,அதன் புவிசார் பாதுகாப்பு  நலன்களோடு சமரசம் செய்யத் தேவையில்லை.மாறாக,கையாளப்பட வேண்டிய ஒரு நாடு என்றால்,அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் பொருத்தமான ஒரு  வெளியுறவுத்  தரிசனம் இருக்கவேண்டும்.அந்த வெளியுறவுத் தரிசனம் உள்நாட்டில் எமது பேரபலம் எது?பிராந்தியத்தில் எமது பேரபலம் எது?உலக அளவில் எமது பேரபலம் எது? என்பது தொடர்பான தொகுக்கப்பட்ட ஆய்வுமுடிவுகளின்  அடிப்படையில் அமையவேண்டும்.உள்நாட்டுக் கொள்கைக்கு வெளியே வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று இருக்க முடியாது.

தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதுகின்றனவென்றால்,அதுவும் ரணில் அங்கு போகவிருக்கும் ஒரு பின்னணியில் மூன்றுகடிதங்கள் அனுப்பப்படுகின்றனவென்றால், இந்தியாவை ஏதோ ஒருவிதத்தில் கையாள வேண்டிய தேவை உண்டு என்று மேற்படி கட்சிகள் நம்புகின்றன என்று பொருள்.இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தவிர்க்கப்படவியலாத ; கையாளப்பட வேண்டிய ஒரு சக்தி என்பதை மேற்படி  கடிதங்கள் உணர்த்துகின்றன. ஆயின் இந்தியாவை கையாள்வதற்கு மேற்படி கட்சிகளிடம் எவ்வாறான வெளியுறவுக் கொள்கை உண்டு? அதற்கு வேண்டிய ஏதாவது நிபுணத்துவக் கட்டமைப்பு அவர்களிடம் உண்டா?

இல்லை.அப்படிப்பட்ட வெளியுறவுத் தரிசனங்கள் இருந்திருந்தால் ரணில் பிரதமர் மோடியை சந்திக்கப்போகும் ஒரு காலகட்டத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விடவும் அதற்கு முன்னரே அதாவது ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் இருந்து தனக்கு அழைப்பு வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ; அதற்காக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த இடையூட்டுக்குள் புகுந்து வேலை செய்திருக்க வேண்டும்.

ஆனால் எந்த ஒரு தமிழ்க்கட்சியும் அதைச் செய்யவில்லை. இப்பொழுது எதிர்த்தரப்பு முன்னெடுக்கும் ஒரு நகர்வுக்கு பதில்வினையாற்றும் நடவடிக்கையாகவே கடிதம் எழுதப்படுகின்றது.அதாவது ரியாக்டிவ் டிப்ளோமசி.

கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபொழுது அதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது.டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு இந்தியா கூட்டமைப்பைக் கேட்டதாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. ஜனாதிபதியாக வந்ததும் ரணில் இந்தியாவுக்குச் செல்வதற்கு இந்தியாவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதற்காக அவர் ஏறக்குறைய ஓராண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது.இப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.இவ்வாறு ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதிக்குள் தமிழ்க் கட்சிகள் தமது நோக்கு நிலையிலிருந்து எவ்வறான வெளியுறவுச் செயற்பாடுகளை “புரோ அக்டிவ் ஆக” முன்னெடுத்தன?

கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா கூட்டமைப்பை-அப்பொழுது கூட்டமைப்பாகத்தான் இருந்தது-டெல்லிக்கு வருமாறு அழைத்தது.ஆனால் சம்பந்தர் பொருத்தமற்ற  காரணங்களைக் கூறி அந்த அழைப்பை நிராகரித்தார். எந்தப் பேரபலத்தை வைத்து அப்படி ஒரு முடிவை எடுத்தார்? இன்றுவரையிலும் அவர் அதை யாருக்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.இந்தியாவின் அழைப்பை சம்பந்தர் நிராகரித்துவிட்டார்.அதன்பின் இந்தியா தமிழ்த் தலைவர்களை டெல்லிக்கு அழைக்கவில்லை.ரணில் ஜனாதிபதியாக வந்ததும் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு அவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை.தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு வரவில்லை.ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்களத் தலைவர்கள் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவை வெற்றிகரமாகக்  கையாண்டு புதுடில்லியை நெருங்கி சென்று விட்டார்கள்.ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ்த் தரப்போ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது?

ரணில் ஒரு புத்திசாலி தந்திரசாலி என்று தமிழர்கள் கூறிக் கொள்ளுகிறார்கள். அப்படியென்றால் ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் எப்படிப்பட்ட தந்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்? ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிசபைத் தேர்தலை அறிவித்தபொழுது அதை நம்பி சுவரொட்டிகளை அடித்த தமிழ்க் கட்சிகள்தானே? அதுவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு சுவரொட்டிக்கு பெருமளவு காசைச்  செலவழிக்க வேண்டியிருந்த  ஒரு பின்னணியில், ரணிலின்   அறிவிப்பை நம்பி தமிழ்க் கட்சிகள் சுவரொட்டிகளை அடித்தன.அல்லது நட்டப்பட்டன என்றும் சொல்லலாம். இப்பொழுது அவர் டெல்லிக்கு போகிறார் என்றதும் ஆனந்தசங்கரியை போல கடிதம் எழுதத் தொடங்கி விட்டார்களா?