இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் இன்று உரையாற்றியிருந்தனர்.

இணைய பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு இது முகம் கொடுத்திருந்தது.

ஊடக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், புத்திஜீவிகள் என பலரும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இந்த சட்டமூலமானது பல்வேறு திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதையடுத்து, நேற்றும் இன்றும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது.

இன்று சபையின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் ஆளும் தரப்பினர் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தரலங்கா சபாவ, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களித்தன.

அந்தவகையில், குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 46 மேலதிக வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.