இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.