இலங்கைக்கான கடனை நிறுத்தும் சீனா

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான “எக்ஸிம் வங்கி” நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது அரசாங்கத்தை புதிய நெருக்கடியில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தைக்கும் – மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக உள்ளூர் மக்களின் 2000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி விடுவிப்பு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வேலைகளை முடிப்பதாக 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.