இந்திய – இலங்கை ஒப்பந்தம் – 35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது?

யதீந்திரா
கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும் சரியாக பிடிக்கத் தெரியாது போனால், இறுதியில் எறிந்தவரையே அது தாக்கிவிடும்.
ஆனால் இவ்வாறான கேள்விகளுக்கு எனது முன்னைய பத்திகளிலும் பதிலளித்திருக்கின்றேன். மீண்டும் அந்த பதிலை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சில விடயங்களை இந்த பத்தியில் காண்போம். இந்த கட்டுரை எழுதப்படும் காலத்திற்கும் தமிழர் அரசியலுக்கும் ஒரு வரலாற்று தொடர்புண்டு. 1987,யூலை (29) மாதத்தில்தான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 35 வருடங்களில், தமிழர் அரசியலில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் முன்நோக்கி சென்றிருப்பதற்கான சான்றுகள் இல்லை. பின்னடைவுகளே இடம்பெற்றிருக்கின்றன. பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்-தமிழ் மக்கள், பல ஜரோப்பிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர், அவர்கள் தாயக அரசியல் தொடர்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதற்கு அப்பால், குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. யுத்தத்திற்கு பின்னரான, கடந்த 13 வருடங்களில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவைகள் எவற்றிலும் தமிழர்கள் வெற்றிபெறவில்லை. ஆகக் குறைந்தது நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் கூட ஏற்படவில்லை. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசிக் கொண்டாலும் கூட, கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுமுறைகளுக்கு ஏற்ப, அழுத்தங்கள் மாறிக் கொண்டிருந்தன. ராஜபக்சக்கள் இருக்கின்ற போது ஒரு மாதிரியும், ரணில் போன்றவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோது, வேறு மாதிரியுமே, மேற்குலக நாடுகள் நடந்துகொண்டன. அவர்கள் அப்படி நடந்து கொள்வதிலும் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், இசையமைப்பிற்கு சொற்களை தேடுபவர்கள் போன்றே தமிழர்களின் வாழ்வு கழிந்திருக்கின்றது.

ஆனால், தமிழர் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக இருக்கும், பிராந்திய சக்தியான, இந்திய பேரசானது – முன்னரும், இப்போதும் ஒரு விடயத்தை மட்டுமே வலியுறுத்திவருகின்றது. அதாவது, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே, இந்தியா தொடர்ந்தும் அழுத்திவந்திருக்கின்றது. இதனை ஆழமாக நோக்கினால், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு, 13வது திருத்தச்சட்டம்தான். அதிலிருந்து முன்னோக்கி செல்வதென்பது வேறு விடயம். ஆனால் எந்தவொரு பயணமும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதே, புது டில்லியின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது. கடந்த 35 வருடங்களில், பல சிங்கள-அரசாங்கங்கள் வந்து போயிருக்கின்றன. அவர்கள் பல்;வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்திருக்கின்றனர். எனினும் 13வது திருத்தச்சட்டத்தை எவராலும் தாண்டிச் செல்ல முடியவில்லை. தாண்டிச் செல்லும் முயற்சிகள் ஒன்றில் தோல்வியடைந்திருக்கின்றன அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 13 வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.

ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில்-மைத்திரி அரசாங்கமும் தேனிலவில் இருந்தது. ஆனால் என்ன நடந்தது? புதிய அரசியல் யாப்பு விடயத்தில் வெற்றிபெற முடிந்ததா? ரணில்-மைத்திரி காலத்தில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகவே இரா.சம்பந்தன், கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

ஆனால் இங்கு பிறிதொரு விடயத்தை ஆழமாக கவனிக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகள் தோல்வியடைக்கின்ற போது, சிங்கள ஆட்சியாளர்கள் சிறிதும் சலனத்தை வெளிப்படுத்துவதில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்து முயற்சிகள் தோல்விடைந்தமை தொடர்பில், ரணிலோ அல்லது மைத்திரியோ கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் புதிய அரசியல் யாப்பு ஒரு முதன்மையான தேவையாக இருந்திருக்கவில்லை. அந்த நேரத்தில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே, புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அக்கறையிருக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையில் இது ஒரு ‘வெட நத்தி வெட’ (வேலை இல்லாதவர்களின் வேலை). ஓப்பீட்டடிப்படையில் ரணில், மங்கள சமரவீர போன்ற ஒரு சிலருக்குத்தான், இந்த விடயங்களில் ஆர்வம் இருந்தது எனலாம். இந்த பின்னணியில்தான், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், என்ன செய்யலாம் என்னும் கேள்விக்கான பதிலை காண்பது சிக்கலான காரியமல்ல. தமிழர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இருப்பதை கையாளுவதன் மூலம் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒரு அஸ்திபாரமாகக் கொண்டு பயணிப்பது. இதில் உண்மையாகவும் உறுதியாகவும் தமிழ் தரப்புக்கள் இருக்க வேண்டும். ஒரு கட்சி 13 பற்றி பேசியவுடன், இன்னொரு கட்சி, 13 எதிர்ப்பு ஊர்வலம் செய்து கொண்டிருந்தால் இதிலும் முன்நோக்கி பயணிக்க முடியாது. இரண்டாவது, முழுமையான புரட்சிகர மாற்றத்திற்காக போராடுவது. போராட்டம் என்பது, நல்லூர் கோவிலடியில் கூடும் போராட்டம் அல்லது பொலிகண்டியில் எந்த இடத்தில் கல்வைப்பதென்று சண்டைபோடும் போராட்டம் அல்ல. ஆனால் நம் அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக விடுதலை போராட்டமொன்றை முன்னெடுக்கக் கூடிய நிலையில் இன்றுள்ள தலைமைகள் எவரும் இல்லை. அப்படியொரு தலைமையிருந்தால், அவரை அறிந்துகொள்வதில் இந்தக் கட்டுரையாளர் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றார்.

அப்படியாயின் என்ன வழிதான் உண்டு? இப்போது, எஞ்சியிருப்பது என்ன? அது ஒன்றுதான் – அதவாது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொண்டு, மெதுவாக முன்னோக்கி நகர்வது மட்டுமே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், மாகாண சபை முறைமையை திறம்பட முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத்தான் தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் மட்டும்தான், புதுடில்லியின் ஆதரவை ஈழத் தமிழர்கள் கோர முடியும். இதை தவிர்த்து எந்த விடயங்களை பற்றிப் பேசினாலும் அவற்றால் தாயகத்திலுள்ள மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஈழத் தமிழர்களிடம் புவிசார் பலமிருக்கின்றது, பிராந்திய பலமிருக்கின்றது என்பதெல்லாம் அரசியல் அறியாமை. நாங்கள் தேவையானதொரு மக்கள் கூட்டமென்று உலகம் கருதியிருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழ் நாட்டு தமிழர்கள், பத்துலட்சம் ஈழத்து புலம்பெயர் சமூகம், இவர்களை சாட்சியாகக் கொண்டுதானே அனைத்தும் நடந்துமுடிந்தது. அப்போது புவிசார் பலத்திற்கும், பிராந்திய பலத்திற்கும் என்ன நடந்தது? பதில் இலகுவானது. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் சிலரது கற்பனை. இவ்வாறான கற்பனைகள் நல்ல திரைப்படமொன்றிற்கு பயன்படலாம் ஆனால் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்து போயிருக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஒரு போதும் பயன்படாது.

மாகாண சபை முறைமையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திப்பது, செயற்படுவது மட்டும்தான், இப்போதுள்ள ஒரேயொரு தெரிவாகும். ஏதிர்காலத்தில் ஒரு சமஸ்டித் தீர்வை நோக்கி பயணிப்பதாக இருந்தாலும் கூட, அதற்கான அடிப்படையும் இங்குதான் இருக்கின்றது. இந்த இடத்தில் பிறிதொரு சங்கடமும் குறுக்கிடலாம். அதாவது, சிலர் அன்று இதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று வாதிட முயற்சிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, ஏற்றுக்கொள்ளாத விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. அவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள் என்பது ஒரு வரலாற்று படிப்பினை. எதிர்காலத்தை சிறந்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணினால், கடந்தகாலத்தை படிப்பது மிகவும் கட்டாயமானது.