இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும்.
இலங்கை மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஈராக், ஜப்பான், மாலைத்தீவு, நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா தற்சயம் அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில்,
இந்தியா இலங்கையுடன் ஒரு ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது, இது சார்க் பிராந்தியத்தில் இதுபோன்ற 6 ஆவது ஏற்பாடாகவும், மொத்தம் 28 ஆவது இடமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இருதரப்பு ஏயர் பபுள் ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.