உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.