எட்கா உடன்படிக்கை நிறைவேறின் இந்தியர்கள் நிரந்தமாக குடியேறுவர் – விமல் வீரவன்ச

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து அண்மையில் இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து இந்தியாவில் ஆற்றிய உரையை ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது ‘எதனையும் குறிப்பிட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.