கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் குறிவைத்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நடத்திய கூட்டமொன்றை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் சென்ற புலனாய்வாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

சிவில் உடையில் வந்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட புலனாய்வாளர்களை, அடையாளம் காணும் முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்ட போது, அவர்களை தாக்கி விட்டு, தப்பியோட புலனாய்வாளர்கள் முயன்றதால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்களுடன் தமிழ் பக்கம் பேசியபோது, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு-

மருதங்கேணி பொது விளையாட்டரங்கில் கிரிக்கெட் கிளப் ஒன்றின் கடினப்பந்து அணி உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது, இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொலிஸ் பாதுகாப்பை ஏற்காதவர். அவரது பாதுகாப்பில் எமது கட்சி உறுப்பினர்கள் அக்கறையுடன் இருப்பார்கள்.

எமக்கு அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்ற இருவரும் நடத்தையில் சந்தேகம் தோன்றியது. அவர்கள் இடுப்பில் பிஸ்டல் வைத்திருப்பதை போல தோன்றியது.

அதனால் அவர்களிடம் சென்று, இங்கு ஏன் நிற்கிறீர்கள் என கேட்டோம்.

அருகில் பரீட்சை நிலையம் உள்ளது. எமக்கு முறைப்பாடு கிடைத்தது. அதனால் பார்வையிட வந்தோம் என்றார்கள்.

பரீட்சை நிலையத்தை பார்வையிட இங்கு வந்து நிற்கும் நீங்கள் யார் என்றோம்.

தாம் சிஐடியினர் என்றார்.

அடையாளத்தை காட்டுமாறு கேட்டோம். அப்போது கஜேந்திரகுமார் எம்.பியும் அங்கு வந்து அடையாளத்தை காட்டுமாறு கேட்டார். ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற போது கஜேந்திரகுமார் எம்.பியை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்ற யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தீபன் திலீசனை ஹெல்மெட்டினால் தாக்கிவிட்டு தப்பியோடினார்.

மற்றையவர் பிடிக்கப்பட்டார்.

இதன்போது, அருகிலுள்ள பாடசாலையில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்தனர். அதில் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கெட்ட வார்த்தைகள் பேசி, தனது இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவி, கஜேந்திரகுமாரை சுடுவதை போல மிரட்டினார் என்றார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.