கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.