இலங்கையில் இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து சீனா ஆராய்வு

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது.

சீனா 2035 ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்தமை தொடர்பில் சீனா கடும் அதிருப்தி

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடைவிதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஆராய்;ச்சிக்கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு  இலங்கை ஒருவருடகால தடையை விதித்துள்ளது.

சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது.

குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்புகரிசனையை இந்;தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன .

எனினும் சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்,இன்னுமொரு நாட்டின் அழுத்தத்தினால் இலங்கை இவ்வாறான முடிவை எடுத்தமை குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஜே.வி.பி யினரை சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அழைக்க வேண்டும் – பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது.

முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது.

இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள்

சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்தியில் 20 சதவீதத்தை கொள்வனவு செய்ய இலங்கைக்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கோர்ப்பரேஷன் அல்லது சினோபெக் நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசித்தமையை அடுத்து, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இதன்படி உத்தேச ஹம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்தில், நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படலாம் என்றும், அதன் கொள்ளளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டத்தின் போது சினோபெக் நிறுவனம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டுவரவுள்ளது.

இது நான்கு ஆண்டுகளில் முழுமையாக அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டுகளில் அரசாங்கம் குறைந்தபட்சம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.

எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார். இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நான் நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜி சிங்கப்பூர் மைதானத்திலிருந்து

“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களே இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜி மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.

ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி.

வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.

இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.

ஒரே சீனக் கொள்கையை இலங்கை எப்போதும் ஏற்றுக் கொள்கின்றது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று வெள்ளிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ‘ஒரே சீனா’ என்ற கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒரு சீனா கொள்கையில் உறுதியாக இருப்பதாக இலங்கை தெரிவிப்பு

ஒரு சீனா கொள்கையில் உறுதியாகயிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் இறைமையை வலியுறுத்தும் வில்லியம் லாய் சிங் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே இலங்கை மீண்டும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

தாய்வானில் தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது ஒரு சீனா கொள்கைகளை முன்னிறுத்துவதில் பின்பற்றுவதில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் இணக்கமான மீள்ஒருங்கிணைப்பை விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நண்பனாகவே துறைமுக நகரத்திற்குச் சென்றேன் – டேவிட் கமரூன்

நான் இலங்கையின் நண்பன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன்தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சீனாவின் கொழும்புதுறைமுக நகரதிட்டத்திற்கு நான் இலங்கையின் நண்பனாகவே விஜயம் மேற்கொண்டேன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்துதெரிவித்துள்ள டேவிட் கமரூன் தான் சீனாவின் நண்பர் என்பதை நிராகரித்துள்ளதுடன் இலங்கையின் நண்பனாகவே நான் கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் சுற்றுலாவிற்கு சென்றவேளை இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் வந்திருந்தார் நான் அவரை சந்தித்த பின்னர் அதன் பின்னர் நான் கொழும்பு துறைமுக நகரத்தை சென்று பார்வையிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி மாதம் டேவிட்கமரூன் கொழும்பின் துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரியில் இலங்கை வரும் மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல்

சீனாவின் சி யான் 6ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்இந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவநோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங் 3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில்தரித்து நிற்கின்றது இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில்விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான் 6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்க நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்புதுறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர்சென்னையிலிருந்து 500 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்புமற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும் , தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் எனஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை பெற்றுகொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்துவருகின்றது.

கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது.

சீன சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இதற்கான யோசனைக்கு அழைப்பு விடுத்த போது சீனாவின் சினோபெக் நிறுவனமும் மற்றும் Vitol நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் Vitol நிறுவனம் இந்த செயல்முறையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.