கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.