களனி பாலத்தில் ஆணிகள் பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அமைச்சர் பந்துல குணவர்த்தன சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2021, நவம்பர் 27 ஆம் திகதியன்று புதிய களனி பாலம் திறக்கப்பட்டது. இன்றுடன் இது திறக்கப்பட்டு 599 நாட்கள் ஆகின்றன.

ஆனால், இங்கிருந்து 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டுள்ளதாக இம்மாதம் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, 8 இலட்சத்து 75 ஆயிரத்து 866 டொலர் பெறுமதியான ஆணிகள்தான் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் என்றால், 77 இலட்சத்து 92 ஆயிரத்து 402 கிலோ இருப்புகள் இங்கு களவாடப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஒரு ஆணியின் நிறையானது 5 கிலோ என எடுத்துக் கொண்டால், 15 இலட்சத்து 58 ஆயிரத்து 480 ஆணிகள், 599 நாட்களில் இங்கிருந்து கழற்றப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 100 ஆணிகள் வீதம் திருடப்பட்டிருந்தால், 21 வருடங்களேனும் தேவை இவ்வளவு ஆணைகளை கழற்றுவதற்கு.

ஆனால், 599 நாட்களில் இவ்வளவு ஆணிகள் கழற்றப்பட்டிருக்குமானால், ஒரு நாளைக்கு 1300 ஆணிகளை கழற்றியிருக்க வேண்டும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கழற்றினால்கூட, 10 ஆணிகளைத்தான் இங்கிருந்து கழற்ற முடியும்.
எனவே, இந்த விடயத்தின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

உண்மையில் இங்கு ஆணிகள் கழற்றப்பட்டுள்ளனவா? அல்லது ஆணிகள் பொறுத்தப்படவில்லையா என்பதை அமைச்சர் சபைக்கு கூற வேண்டும். ”என்றார்.